2018-01-16 15:24:00

சந்தியாகோவில் அரசு, தூதரக, பொதுநிலை அதிகாரிகள் சந்திப்பு


சன.16,2018. “சிலே நாட்டின் Arica வடகோடி முனை முதல், Parinacota தென்கோடியிலுள்ள தீவுக்கூட்டங்கள் வரையுள்ள, அனைத்து சிலே மக்களையும், நான் அரவணைத்து வாழ்த்த விரும்புகிறேன்” என்ற வார்த்தைகளை சனவரி 16, இச்செவ்வாய் காலையில் டுவிட்டரில் வெளியிட்டு, சிலே நாட்டிற்கான மூன்று நாள் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 8.10 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இச்செவ்வாய் மாலை 4.40 மணிக்கு, சந்தியாகோ நகர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை. Palacio de La Moneda அல்லது La Moneda என அழைக்கப்படும் இம்மாளிகையில், 1814ம் ஆண்டுக்கும் 1929ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிலே நாட்டின் நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. அதனால் Palacio de La Moneda அதாவது நாணயத்தின் மாளிகை என்று இது அழைக்கப்படுகிறது. இந்த மாளிகை, இத்தாலிய கட்டட கலைஞர் Joaquín Toesca என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1784ம் ஆண்டில் இதன் கட்டடப் பணிகள் துவங்கின. 1805ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த மாளிகையில், இன்றும் கட்டட சீரமைப்புப் பணிகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. நாணயங்கள் தயாரிக்கப்பட்ட இந்த மாளிகை, 1845ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அரசுத்தலைவர் Manuel Bulnes அவர்களின் நிர்வாகத்தின்போது, அரசு மற்றும் அரசுத்தலைவரின் இல்லமாக மாற்றப்பட்டது. இந்த மாளிகையில் கடைசியாக வாழ்ந்தவர் அரசுத்தலைவர் கார்லோஸ் இபானெஸ் ஆவார். 1973ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, சிலே நாட்டின் விமானப்படை இந்த மாளிகை மீது குண்டு வீசியது. இதில் இம்மாளிகையின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. அதே நாளில் அரசுத்தலைவர் சால்வதோர் அலந்தெ என்பவர், இம்மாளிகையில் காலமானார். பின்னர் இம்மாளிகை 1974ம் ஆண்டுக்கும் 1981ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 18ம் நூற்றாண்டு கட்டடம் போன்றே புதுப்பிக்கப்பட்டது. La Moneda மாளிகைக்கு, இச்செவ்வாய் காலையில் சென்ற திருத்தந்தையை அரசுத்தலைவர் வரவேற்று அழைத்துச் செல்ல, அதிகாரப்பூர்வ அரசு வரவேற்பு திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது. அந்த மாளிகையில் சிலே நாட்டின் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டத்துறையினர், தூதரக அதிகாரிகள், சமூக, கலாச்சார பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் சிலே அரசுத்தலைவர் Michelle Bachelet Jeria அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின்னர், திருத்தந்தையும் சிலே நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார். சிலே நாட்டுத் திருஅவையின் சில அருள்பணியாளர்கள், தங்கள் கண்காணிப்பிலிருந்த சிறாரைப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, என் சகோதர சிலே ஆயர்களுடன் சேர்ந்து மன்னிப்பை இறைஞ்சுகிறேன், இத்தகைய தவறுகள் இனிமேல் நடக்காதிருப்பதை உறுதிசெய்வதற்கு திருஅவை தன்னை அர்ப்பணிக்கும் என்று திருத்தந்தை உரையில் கூறினார்.

இந்நிகழ்வுக்குப் பின், அந்த மாளிகையில் அரசுத்தலைவரை, மரியாதை காரணமாக தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், La Moneda மாளிகையிலிருந்து 22 கிலே மீட்டர் தூரத்திலுள்ள O’Higgins பூங்காவுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.