2018-01-13 15:56:00

போலந்தில் 2018ம் ஆண்டு புனித ஸ்தனிஸ்லாசுக்கு அர்ப்பணம்


சன.13,2018. படிக்கும் இளையோரின் பாதுகாவலரான இயேசு சபை புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா அவர்களுக்கு, 2018ம் ஆண்டை அர்ப்பணித்துள்ளது, போலந்து கத்தோலிக்க திருஅவை.

இது குறித்து ஆயர்கள் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கை, சனவரி 14, இஞ்ஞாயிறன்று போலந்து நாட்டின் அனைத்து ஆலயங்களிலும் வாசிக்கப்படும்.

புனித ஸ்தனிஸ்லாஸ், வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும், உலக ஆயர்கள் மாமன்றத்தின் கருப்பொருளோடு ஒத்துச்செல்கிறார் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

போலந்து நாடு சுதந்திரம் பெற்றதன் நூறாம் ஆண்டு, வருகிற நவம்பரில் சிறப்பிக்கபடும்வேளை, மேய்ப்பர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும், குறிப்பாக இளையோரும், போலந்தின் பாதுகாவலரான இப்புனிதர் பற்றி சிந்தித்து, இந்நிகழ்வுக்குச் சிறப்பாகத் தயாரிக்குமாறும் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, போலந்து மற்றும் லித்துவேனிய அரசுகளின்  பாதுகாவலர் என்று, திருத்தந்தை பத்தாம் கிளமென்ட் அவர்கள், 1674ம் ஆண்டில் அறிவித்ததையும் ஆயர்கள் நினைவுபடுத்தியுள்ளனர். 

இயேசு சபை புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்காவின் திருப்பண்டம், உரோம் sant’Andrea al Quirinale ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டில் ராஸ்கோவ் என்ற நகரில், 1550ம் ஆண்டில் உயர்குலத்தில் பிறந்த புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, தனது 17வது வயதில், 800 மைல் தூரம் நடந்தே உரோம் வந்து இயேசு சபையில் சேர்ந்தார். ஒன்பது மாதங்களே இளந்துறவியாக வாழ்ந்த இவர், நோயால் தாக்கப்பட்டு, 1568ம் ஆண்டு காலமானார். 

1918ம் ஆண்டு, நவம்பர் 11ம் தேதி ஜெர்மனி, ஆஸ்ட்ரியா மற்றும், இரஷ்யப் பேரரசுகளிடமிருந்து, போலந்து விடுதலை அடைந்து, இறையாண்மை பெற்ற நாடாக மாறியது. இந்நாள், போலந்தில், தேசிய சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.