2018-01-13 14:22:00

பொதுக்காலம் 2ம் ஞாயிறு - பொங்கல் திருநாள் - ஞாயிறு சிந்தனை


தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும், இஞ்ஞாயிறன்று, பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எல்லா நாடுகளிலும், ஆண்டின் பல்வேறு நாட்களில், அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளம், மனித உழைப்பு, இறைவனின் கருணை அனைத்தும் இணைந்து, நமக்குக் கிடைத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது.

வேளாண்மையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், நம் உள்ளங்களில் மகிழ்வான எண்ணங்களை உருவாக்கும் அதே வேளை, வேளாண்மை செய்வோரைப் பற்றிய கவலைகளையும் நெருடல்களையும் உருவாக்கத் தவறவில்லை. சேற்றில் இறங்கி, வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயப் பெருமக்கள், தங்கள் உழைப்பிற்கேற்ற பலனை அறுவடை செய்வதில்லை என்பதை, தமிழக விவசாயிகள், டெல்லியில் மேற்கொண்ட தொடர் போராட்டத்தால் உணர்த்த முயன்றனர். அவர்களது போராட்டத்திற்கு தகுந்த ஆதரவு இல்லாமல் போனது, உள்ளத்தில் வேதனையை உருவாக்குகிறது.

பொங்கிவரும் பாலில் நீர் தெளித்து அடக்குவதுபோல், நம் மகிழ்வை அடக்கிவிடும் இந்த நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில், நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு, இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.

சனவரி 14, இஞ்ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றத்தாரர் உலக நாளை, கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கிறது. 1914ம் ஆண்டு, திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்களால் நிறுவப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு, 104வது முறையாக சிறப்பிக்கப்படுகிறது.

கோடிக்கணக்கான மக்களை, குறிப்பாக, குழந்தைகளை, நாடற்ற நாடோடிகளாக அலையவிடுவது, இன்றைய உலக அரசுகள் செய்துவரும் பெரிய அநீதி. இவ்வுலகில் பிறக்கும் எவரும், இவ்வுலகிற்கு உரிமையாளர்கள் அல்ல, அனைவருமே இங்கு பயணிகள், சிறப்பாக, திருப்பயணிகள் என்பதை நாம் உணர்ந்தால், புலம் பெயர்ந்தோரை நமது துணைப் பயணிகளாக ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கும். இதற்கு மாறாக, சில அரசுத்தலைவர்கள், தங்கள் நாட்டை அவர்களது தனிப்பட்ட சொத்தாகக் கருதி, தங்கள் நாட்டைச் சுற்றி சுவர்கள் எழுப்புவதும், வேற்று நாட்டவரை, தங்கள் உரிமைச் சொத்தில் குறுக்கிடுபவர்களாக குற்றம் சாட்டி, அவர்களை விரட்டியடிப்பதும், வேதனை தரும் உண்மை. நாம் அனைவருமே இவ்வுலகில் பயணிகள் என்பதையும், எனவே, அயலவரை, குறிப்பாக, அன்னியரை, உடன் பயணிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும், லேவியர் நூலில் இறைவன் நமக்கு தெளிவாக நினைவுறுத்தியுள்ளார்:

உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்... (லேவியர் நூல் 19:34)

சங்க காலப் புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் அவர்கள், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அதாவது, “எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் உறவினரே” என்று எழுதிய பொன்னான வரிகள், தமிழரின் பரந்த மனப்பான்மையை நமக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றன. அன்று அவர் பறைசாற்றிய அந்த அற்புத மனப்பான்மையில், தமிழர்கள் மட்டுமின்றி, இவ்வுலக மக்கள் அனைவருமே வளர்ந்தால், உலகில் உறவுகளற்ற புலம்பெயர்ந்தோர் இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி.

இனி, இன்றைய ஞாயிறு வாசகங்களின் மீது ஒரு பார்வை....

நம் ஒவ்வொருவருக்கும், வாழ்வின் பல நிலைகளில், பலச் சூழல்களில், இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பதை, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. சிறுவன் சாமுவேலுக்கு இறைவன் அறிமுகமான நிகழ்வை, முதல் வாசகமும் (1 சாமுவேல் 3: 3ஆ-10, 19), வளர்ந்துவிட்ட நிலையில் அந்திரேயா, மற்றும் பேதுரு இருவருக்கும், இயேசு அறிமுகமாகும் நிகழ்வை, இன்றைய நற்செய்தியும் (யோவான் 1: 35-42) படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த இரு நிகழ்வுகளுமே, சில பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன.

சிறுவன் சாமுவேலுக்கு, ஆண்டவரின் இல்லத்தில், இறைவன் அறிமுகமாகிறார். ஆண்டவரின் இல்லமே அவன் வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும், அந்தப் புனிதமான இடத்தில், அச்சிறுவனால், இறைவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

நம் வாழ்வை ஆய்வு செய்யும்போது, நமக்கு அதிக பழக்கமான இடங்களிலும், சூழல்களிலும் இறைவன் தன்னை அறிமுகப்படுத்திய நேரங்களில், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் அவதியுற்றிருக்கிறோம். குறிப்பாக, நம் துன்ப நேரங்களில், இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணியிருக்கிறோம்.

கடற்கரையில் இறைவனும், பக்தனும் இணைந்து நடந்து சென்ற கதை நமக்கு நினைவிருக்கும். கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்த பக்தன், தானும், இறைவனும் வாழ்வில் இணைந்து நடந்ததன் அடையாளமாக இரு சோடி காலடித்தடங்கள் பதிந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தான். ஒரு சில வேளைகளில் அந்தப் பாதையில், ஒரு சோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டான், பக்தன். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடித்தான். உடனே பக்தன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிட்டான். இறைவன், பதில் மொழியாக, "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது, ஒரு சோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு, அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரங்களில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார்.

சிறுவயதில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இறைவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவருடன் அதிகமான நேரத்தைச் செலவு செய்யாமல் போனதால் இத்தவறுகள் நடந்தன. இத்தவறுகளைத் தீர்க்கும் வழிகளை, இன்றைய நற்செய்தி சொல்லித்தருகிறது.

இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுவை, தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, வழியோரம், இயேசுவின் அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே, மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை, இன்றைய நற்செய்தி நினைவுறுத்துகிறது.

வழியோரம் அறிமுகமான இயேசுவை, வழியோரமாகவே விட்டுவிட்டு, தங்கள் வழியில் செல்லவில்லை, அச்சீடர்கள். அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இந்நிகழ்வைக் கூறும் யோவான் நற்செய்தியின் வரிகளைக் கேட்போம்:

யோவான் நற்செய்தி 1: 38-39

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

இயேசு பேசிய முதல் சொற்களாக, யோவான் நற்செய்தியில் நாம் காண்பது, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற பொருள் செறிந்த கேள்வி. இதைத் தொடர்ந்து, "வந்து பாருங்கள்" என்ற அழைப்பை இயேசு விடுக்கிறார்.

ஒவ்வொரு புதிய ஆண்டிலும் நாம் தேடல்களை மேற்கொண்டு வருகிறோம். பொதுவாக, இத்தேடல்கள், நமது வாழ்வை, கூடுதலான நலமும், வசதியும் நிறைந்ததாக மாற்றும் தேடல்களாக அமைகின்றன. நம்மிடம், இன்று, இயேசு, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினால், நமது பதில் என்னவாக இருக்கும் என்பதை, ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வது பயனளிக்கும். 2018ம் ஆண்டு, நாம் தேடுவது என்ன?

"என்ன தேடுகிறீர்கள்?" "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற இரு கேள்விகளும், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பும், அந்த அழைப்பை ஏற்று, சீடர்கள் இயேசுவுடன் தங்கியதும், இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இறைவனை, இயேசுவை, உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க விரும்பும் சீடர்களுக்குத் தேவையான இரு அம்சங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. இறைவனைத் தேடுவதும், இறைவனுடன் தங்குவதும் சீடர்களுக்கு மிகவும் தேவையான அம்சங்கள். அடுத்ததாக, தாங்கள் பெற்ற அனுபவத்தை, பிறரும் பெறவேண்டுமென்ற ஆவலில், அவர்களை இறைவனிடம் அழைத்துச் செல்வதும், உண்மையான சீடரின் பண்பு. இதையே, அந்திரேயா செய்தார்.

அந்திரேயா முதலில் இயேசுவைச் சந்திக்கிறார். பின்னர், தான் பெற்ற இன்பம் தன் சகோதரனும் பெற வேண்டும் என்று, பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். நம் குடும்பங்களில், உடன்பிறந்தோரும், உறவுகளும், வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக, பலரை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்து வைக்கிறோம். இந்த அறிமுகங்களில் எல்லாம் மிக முக்கியமான அறிமுகம், இறைவனை, அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது.

இந்த அறிமுகம் நம் குடும்பங்களில் நடைபெறுகிறதா? நாம் வாழும் அவசர உலகில், இறைவனை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும். இறைவனை நம் குடும்பங்களில் அறிமுகப்படுத்த, அவருடன் உறவை வளர்க்க, குடும்ப செபங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

அந்திரேயா தன் உடன் பிறந்த பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். பேதுருவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதால், காலத்தால் அழியாத ஒரு வரலாறு உருவானது. பேதுருவைக் கண்டதும் இயேசுவின் முழு கவனமும் அவர்மீது திரும்பியது. அவரை 'கேபா' 'பாறை' உறுதியானவர் என்றெல்லாம் புகழ்கிறார் இயேசு. தான் அழைத்து வந்த சகோதரன் மீது இயேசு தனி கவனம் காட்டியது, அந்திரேயாவுக்கு வருத்தத்தையோ, பொறாமையையோ உருவாக்கவில்லை. காரணம், அவர் திருமுழுக்கு யோவானின் சீடர். ‘அவர் வளரவேண்டும், தான் மறைய வேண்டும்’ என்று அடிக்கடி சொல்லி வந்த திருமுழுக்கு யோவான் இயேசுவை தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்தார்; மறைந்துபோனார். அவரது சீடராக இருந்த அந்திரேயாவும், அதே மன நிலையில் இருந்தார். தான் மறைந்தாலும் சரி, தன் சகோதரன் பேதுரு வரலாறு படைக்கவேண்டும் என்று எண்ணினார் அந்திரேயா. அவர் எண்ணியபடியே, இயேசுவும், பேதுருவும் படைத்த அந்த வரலாறு, 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது.

உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் இந்தப் பொங்கல் திருநாளில் நாம் ஒருவர் ஒருவருக்கு இறைவனை அறிமுகம் செய்வதற்கும், அனைவரும் இணைந்து, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்த மனப்பான்மையுடன், மனித குடும்பத்தை உருவாக்குவதற்கும் இறைவன் நமக்கு நல்வழிகாட்ட மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.