2018-01-13 16:00:00

கால்பந்து அரங்கத்திற்குள் முதல் முறையாக சவுதி பெண்கள்


சன.13,2018. சவுதி அரேபியாவில், ஆண்களின் கால்பந்து போட்டியினைப் பார்வையிட, முதல் முறையாக, பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில், இவ்வெள்ளியன்று நடந்த கால்பந்துபோட்டியைப் பார்த்து இரசிப்பதற்கு, முதன் முறையாக பெண்கள் விளையாட்டு அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான் அவர்கள், எடுத்து வருகின்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பெண்களுக்கு விளையாட்டு அரங்கில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள், சவுதியில் திரையரங்குகளைத் திறக்கவும், பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதியளித்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

சவுதி அரேபிய அரசின் சட்டங்களின்படி, வேலைக்குச் செல்லும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் பெண்கள், ஆண் துணை இல்லாமல் கட்டாயம் வெளியே வரக்கூடாது. கடவுசீட்டுக்கு விண்ணப்பிப்பது, வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது, வங்கிக் கணக்கு திறப்பது, திருமணம் செய்துகொள்வது, சில தொழில்களைத் தொடங்குவது, அவசர சிகிச்சை அல்லாத, அறுவை சிகிச்சை செய்வது, சிறையைவிட்டு வெளியேறுவது உள்ளிட்டவற்றை பெண்கள் செய்ய, குடும்ப ஆண்களின் அனுமதி கட்டாயம் தேவை என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.