2018-01-12 14:52:00

ஏழு வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதற்கு திருஅவை கண்டனம்


சன.12,2018. பாகிஸ்தான் சமுதாயத்தில் சிறாருக்கு எதிரான பாலியல் உரிமை மீறல்களும், குற்றங்களும், பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளன என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை கூறியுள்ளது.

பாகிஸ்தானில் சைனாப் என்ற ஏழு வயது சிறுமி, பாலியல் வன்செயலில் கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டுள்ளதற்கு, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர், ஜோசப் அர்ஷத் அவர்கள், மனித மாண்பின் மேன்மை குறித்து மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, இந்நிகழ்வு உணர்த்துகின்றது என்று கூறினார்.

பாகிஸ்தானில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறார்க்கெதிரான 720 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டில் மட்டும் 129 பாலியல் வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்று, ஆசிய செய்தி கூறுகின்றது.

சனவரி 4ம் தேதி இஸ்லாமிய வகுப்புச் சென்ற சிறுமி சைனாப், அன்று வீடு திரும்பவில்லை. ஆனால் அச்சிறுமியின் உடல், மிகக் கொடூரமான நிலையில், சனவரி 10ம் தேதி, லாகூருக்கு அருகிலுள்ள காசூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் சிறுமி சைனாப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டின் சமா தொலைக்காட்சியைச் சேர்ந்த கிரண் நாஸ் என்பவர், தனது சின்னச்சிறு மகளை மடியில் அமரவைத்தபடியே செய்தி வாசித்துள்ளார்.

அன்றைய தினத்தின் செய்தியை அவர் வாசிக்கத் தொடங்கியபோது, "நான் இன்று வெறும் கிரண் நாஸ் இல்லை. நான் ஒரு தாய். ஏழு வயது சிறுமி ஒருவர் இந்நிலைக்கு உள்ளாகியிருப்பது, மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசின் இயலாமையை உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.   

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.