2018-01-11 15:13:00

நேர்காணல் –பொங்கல் திருவிழா பற்றிய ஒரு பகிர்வு


சன.11,2018. சனவரி 14, வருகிற ஞாயிறு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் சனவரி 12ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பேணிக்காக்கும்பொருட்டு விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருவிழா பற்றிய எண்ணங்களை, இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், அ.பணி ஆன்டனி ராஜ், கப்புச்சின் சபை

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

தமிழர் பண்டிகை - வழங்குபவர் அருட்பணி. அந்தோணிராஜ் OFMcap

தைப்பொங்கல், அறுவடைத் திருநாள், பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை என்ற பெயர்களில் இப்பண்டிகை அழைக்கப்படும். பொங்கல் என்றால் பொங்கிவருதல் அல்லது பெருகுதல் எனப்பொருள்படும். பண்டிகை என்றால் பண்டம் + ஈகை. பண்டத்தைக் கொடுத்தல் அல்லது பகிர்தல் எனப்படும்.

தமிழ்நாட்டைத் தவிர்த்து பொங்கல் பண்டிகை மலேசியா, சிங்கப்பூர், கானடா, இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து உலக நாடுகளிலும் இப்பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. மலேசியா, இலங்கை, வெர்ஜினியா, உள்ளிட்ட சில நாடுகளிலும் பகுதிகளிலும், இந்நாளில் அரசு விடுமுறை விடப்படுகின்றது.

தோற்றம்...

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாத் தெரியவில்லை.

ஆப்ரிக்காவில் இன்றும் பழங்குடியினராகவே வசிப்பவர்கள் ஏராளம் - ஐரோப்பாவில் உரோமை, கிரேக்க நாகரீகத்திற்கு முன்பாக, பழங்குடியினராகவே வாழ்ந்தனர். இவை அனைத்துமே பிற்கால நாகரீகம்.

நம் தமிழர் நாகரீகம் மட்டுமே பழமையிலும் பழமையானது. எவ்வாறு இது சாத்தியமானது. வரலாற்றுப்பூர்வமாக அறுதியிட்டுக் கூற முடியாது எனினும் தர்க்க ரீதியாக சிந்திக்கின்றபொழுது, தமிழ் இனம் ஆதிமனிதன் - வேட்டையாடுதல் - கிழங்குகள்- காட்டுத்தானியங்கள்- காட்டுவிலங்குகள் - வீட்டுவிலங்குகளாக மாற - விவசாயம்- நெல் பயிரிடுதல் ஒரு சவாலானதாக இருந்திருக்க வேண்டும் அதை வெற்றிகரமாக விவசாயம் செய்ததை நினைவு கூறும் பண்டிகை.

காட்டுமாடுகளை அடக்கி வீட்டுமாடுகளாக மாற்றிய வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. அப்பண்டிகை மாட்டுப் பொங்கல்

எனக்கு போகிப்பண்டிகை என்பது பிற இனத்தவரிடமிருந்து பெற்ற விழாவாகத்தான் இருந்திருக்க வேண்டும். காரணம். போக்கி என்பது மருவி போகி என ஆனது. போக்கி என்றால் போக்குதல். நீக்குதல் தவிர்த்தல். இதன் நீட்சியாக எரித்தல். எரித்தல் என்பது நம்முடைய பண்பாடு அல்ல. காரணம் நாம் அழிப்பவர்கள் அல்ல, மாறாக இருப்பதை இல்லாதவரோடு பகிர்தல்தான் நம் பண்பு. அப்படியே ஒரு பொருள் ஒன்றுக்கும் உதவாமல் போனால் அதை நாம் ஓடும் தண்ணீரில் விட்டுவிடுவோம். மனிதன் இறந்தால்கூட ஓடும் தண்ணீரில் விடுதல்தான் நம் பண்பாடு. காரணம் தமிழர்கள் அனைத்து ஆற்றுப் படுகைகளிலும், கடலோரங்களிலும் குறிப்பாக கங்கை. யமுனை சிந்து, பிரமபுத்திரா கிருஷ்ணா, கோதாவரி, காவேரி, வைகை, தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் வசித்தவர்கள். தண்ணீர்தான் நமக்கு எல்லாமுமே.

அதேபோல் நாம் இப்பொழுது வசிக்கின்ற தமிழகம் காலம் காலமாகத் தொன்றுதொட்டு வாழுகின்ற பகுதி. இங்கிருந்துதான் இந்தியப்பகுதி முழுவதிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் குடிபெயர்ந்திருக்கிறோம். எனவே நாம் கீழ் இருந்து மேல் நோக்கி பயணித்தவர்கள். சிந்துச்சமவெளி நாகரீகம் நம்முடையது. கரப்பா மொகஞ்சதோரா அழிவுக்குக் காரணம் இயற்கைச் சீற்றம். இதை முன்கூட்டியே அறிந்து தமிழர்கள் வெளியேறியிருக்கிறார்கள். காரணம் நாம் இயற்கையோடு அதிகத் தொடர்பு உள்ளவர்கள் (எ.கா.) திருமிகு. ஓரிசா பாலு குறிப்பிடுவது போல, ஆமையை அடிப்படையாகக்கொண்டு உலகம் முழுவதும் பயணித்திருக்கிறோம். செங்கால் நாரையை வைத்து ஆகாய மாற்றங்களைக் கண்டறிந்திருக்கிறோம். இயற்கை மாற்றங்கள் அனைத்தையும் அறிந்து வைத்தவர் நம் முன்னோர்கள்.

இதன் அடிப்படையில் சிந்திக்கின்ற பொழுது இவ்வுலகிற்கு தமிழர்கள் கொடுத்தவைகள் எண்ணிலடங்காதவை. அவைகளில் ஒருசிலவற்றைப் பட்டியலிடுகிறேன்

 

1.            முதன்முதலில் விவசாயத்தை கொணர்ந்தவர்கள்

2.            தானியங்களைக் கண்டறிதல்

3.            சுவையாகக் கற்றுக்கொடுத்தவர்கள்

4.            வீட்டு விலங்குகளை வளர்த்தல்

5.            இரும்பைக் கண்டுபிடித்தல்

6.            விலங்குகள் பறவைகள் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் அறிவை வைத்து பல்வேறுவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்கள்

7.            மூலிகை மருத்துவத்தை முதன்முதலில் அறிமுகம் செய்தவர்கள்

8.            கராப்பா மொகஞ்சதோரா ஆய்வின்படி அடிமைத்தனம் இல்லாத ஒரே சமூகம் தமிழ்சமூகம்

9.            ஒழுக்கத்தில் மேலோங்கியவர்கள்

10.          குழும ஆட்சி அல்லது குடும்ப ஆட்சியை மேற்கொண்டவர்கள். தனிமனித ஆட்சிக்கு இடமே இல்லை

11.          சமூக வாழ்விலிருந்து - குடும்ப வாழ்வைச் சொல்லிக்கொடுத்தவர்கள். சமூக வாழ்வில் விலங்குகளைப்போல கூட்டம் கூட்டமாக வாழ்ந்த சமூகத்தின் மத்தியில் முதன்முதலாக குடும்ப வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள்

12.          அம்மா அப்பா தம்பி தங்கை அண்ணன் மதினி மச்சான் மாமா என முதன்முதலாக உறவு சொல்லி அல்லது முறை சொல்லி அழைத்தவர்கள் நம் முன்னோர்கள்.

இந்த உறவுகளைக் காண ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று அவர்களுக்குத் தேவையானதை எடுத்துச்சென்று தாங்கள் வைத்திருந்ததை அவர்கள் சமைத்துக் கொண்டாடிய பண்டிகைதான் பொங்கல் மற்றும் காணும்பொங்கல்.

நமக்கு காலமெல்லாம் கைகொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

அரிசி நன்கு சமைத்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்கி நன்கு பொங்கி வந்தால், அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் பெறுவோம் என்ற நிறைவோடு கொண்டாடுதல்தான் பொங்கல் பண்டிகை.

வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்த பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடப்படும்.  மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, காஞ்சரம்பேட்டை ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு பெயர் போனவை. இதில் அலங்காநல்லூர் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு களமாகும்.

 

கரும்பு-ஜல்லிக்கட்டு-பொங்கல்..

பொங்கல் பண்டிகையின் மூன்று முக்கிய அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, இனிப்புப் பொங்கல்தான். இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது.

இவைஒட்டு மொத்தத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டு கலாச்சார பண்டிகை விழாதான் இப்பொங்கள் பண்டிகை இது எம்மதத்தையும் சாராதது. எனவே நம் பாரம்பரியம் அறிந்து இப்பண்டிகையைக் கொண்டாட ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அழைக்கின்றேன்.

இவ்வாண்டில். மஞ்சளைப் போல மங்கலகரமாகவும்

தித்திக்கும் கரும்பைப்போல சுவை மிகுந்ததாகவும்

பொங்கிவரும் பொங்கலைப்போல தமிழர் வாழ்வு முழுவதும் வளமும் நலமும் அன்பும் அமைதியும் சாந்தமும் சந்தோசமும் மகிழ்ச்சியும் நிறைவும் பெற்று நிம்மதியான வாழ்வு வாழ ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

விவிலியத்தில் அறுவடைத்திருநாள்

யாவே இறைவன் மோசே வழியாக மூன்று விழாக்களைக் கொண்டாட பணித்தார்.

1.            புளிப்பற்ற அப்ப விழா- 7 நாட்களாகக் கொண்டாடினார்கள்

2.            அறுவடை விழா- பெந்தகோஸ்தே விழா - 50 வது நாள் கொண்டாடினார்கள்

3.            சேகரிப்பு விழா - ஆண்டின் இறுதிநாளில் கொண்டாடினார்கள்

 

இவ்வறுவடைத் திருவிழாவைப் பற்றி கீழ்க்கண்ட விவிலிய வசனங்கள் நமக்கு விளக்குகின்றன. விப 23:16 விப 34:22 லேவி 23:9-16 எண் 28:26 இணை 16:10

இந்த அறுவடை விழா - கடவுள் மோயீசனுக்கு கட்டளைகளை சீனாய் மலையில் கொடுத்ததை நினைவுகூரும் விழாவாகவும் கொண்டாடப்பட்டது

விப 13:2ன் அடிப்படையில் 14 வயதை நிறைவு செய்த 60 வயது நிறைவு அடைவதற்கு முன் உள்ள அனைத்து யூத ஆண்களும் கட்டாயமாக மூன்று விழாக்களுக்கு எருசலேம் சென்று ஆண்டவருக்கு பலியிட்டு நன்றி செலுத்த வேண்டும். அதில் இந்த அறுவடைத் திருவிழாவும் ஒன்று.

அறுவடைத் திருவிழா என்பது விளைந்த முதற்கனியை ஆண்டவருக்கு காணிக்கையாக்குவது. விப 13: 2 தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய். மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை.

இதன் அடிப்படையில் முதற்கனி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே (ரோமை 8:29)

இம்முதற்கனி தன்னையே பாஸ்காவாகப் பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து 50ம் நாள் தூய ஆவி எனும் துணையாளரை அனுப்பினார். இவ்விழாவைத்தான் நாம் இன்று அறுவடைத் திருவிழாவாக அல்;லது பெந்தெகோஸ்தே பெருவிழாவாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறோம். ஆண்டவர் என்றென்றும் நம்மோடு துணையாயிருக்கிறார் என்பதை எண்பிக்கின்ற விழாதான் அறுவடைத் திருவிழா.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். (அருட்பணி.அந்தோணிராஜ் OFMcap)








All the contents on this site are copyrighted ©.