2018-01-11 15:46:00

ஐ.நா.அவையின் இரு பெரும் நிறுவனங்களின் இணை முயற்சி


சன.11,2018. சுற்றுச்சூழல் பாதிப்புக்களால் உடல்நலம் இழந்து இறப்போரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும், 1 கோடியே, 26 இலட்சம் என்ற அளவில் இருப்பதை தடுக்கும் வண்ணம், ஐ.நா. அவையின் இரு பெரும் நிறுவனங்கள் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

UNEP எனப்படும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமும், WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனமும் இணைந்து, இப்புதனன்று புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

இந்த இணை முயற்சியின் பயனாக, காற்று மாசுக்கேடு, காலநிலை மாற்றம், வேதியல் கழிவுகளின் மேலாண்மை, குடிநீரின் தரம், சத்துணவு தொடர்பான பிரச்சனைகள் ஆகிய விடயங்களில் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றவுள்ளன.

காற்று மற்றும் நீர் மாசுப்பாடு, வேதியல் கழிவு ஆகியவற்றின் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும், 1 கோடியே 26 இலட்சம் மக்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் அநீதி. இது தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர், Tedros Ghebreyesus அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் காலநிலை மாற்றத்தைச் சீராக்குதல் ஆகிய இரு கூறுகளும், இவ்வுலகில் உயிர்களைத் தாங்கி நிற்கும் இரு தூண்கள் என்று, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் இயக்குனர் Erik Solheim அவர்கள் கூறினார்.

BreatheLife, அதாவது, 'வாழ்வை சுவாசிப்போம்' என்ற பெயரில், இவ்விரு நிறுவனங்களால் துவங்கப்பட்டுள்ள கொள்கைப்பரப்பு முயற்சிகள், ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.