2018-01-10 16:09:00

நாம் எங்கே போகிறோம்? - பாங்கி பேராயர் கர்தினால் Nzapalainga


சன.10,2018. நாம் எங்கே போகிறோம்? 2018ம் ஆண்டு மத்திய ஆப்ரிக்க குடியரசின் மக்கள் எவ்விதம் இருப்பர்? என்ற கேள்விகளை, பாங்கி பேராயரான கர்தினால் Dieudonné Nzapalainga அவர்கள், அந்நாட்டு ஆயர் பேரவையின் ஆண்டு கூட்டத்தில் எழுப்பினார்.

கடந்து வந்த 2017ம் ஆண்டில், மத்திய ஆப்ரிக்க குடியரசின் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளானர் என்று கூறிய கர்தினால் Nzapalainga அவர்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு, எரிக்கப்பட்டதையும், அருள் பணியாளரும், மக்களும் கொல்லப்பட்டதையும் தன் உரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பாங்கி பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்த புனிதக் கதவின் வழியே, நம்மை வந்தடைந்த இறைவனின் இரக்கம், பல கடினமானச் சூழல்களை நாம் எதிர்கொள்ள உதவியாக இருந்ததென்று, கர்தினால் Nzapalainga அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

2017ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைகளால், 30,000த்திற்கும் அதிகமானோர் Paoua நகர், மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

சனவரி 8, இத்திங்களன்று துவங்கியுள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசின் ஆயர் பேரவை, சனவரி 14, வருகிற ஞாயிறன்று நிறைவடையும் என்று பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.