2018-01-10 12:40:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருப்பலி துவக்கப் பகுதி


சன.,10,2018. உரோம் நகரில் குளிர் காலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, கடந்த சில வாரங்களைப்போல், இவ்வாரமும், அருளாளர், திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலேயே இடம்பெற்றது. 'வாக்கு மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார்..... இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்' என்ற பகுதி, புனித யோவான் நற்செய்தி, பிரிவு ஒன்றிலிருந்து வாசிக்கப்பட, திருப்பலி குறித்த தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! திருப்பலி குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, 'உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை' என்ற வானவர் கீதம் குறித்தும், திருப்பலி துவக்க செபம் குறித்தும் நோக்குவோம். நம் பாவங்களை ஏற்று அறிக்கையிட்டு, இறைவனின் மன்னிப்பை வேண்டும் பாவக்கழுவாய் சடங்கு முறையைத் தொடர்ந்து, 'உன்னதங்களில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாகுக' என்ற தொன்மைகால வானவர் கீதத்தைப் பாடுகின்றோம். இக்கீதம், ஞாயிற்றுக்கிழமைகளிலும், திருவிழாக் காலங்களிலும் செபிக்கப்படுகின்றது. நம் இறைவனின் பிறப்பின்போது வானதூதர்கள் பாடிய பாடலை எதிரொலிப்பதாக இருக்கும் இதில், இவ்வுலகின் பாவங்களை அகற்றும் தம் மகனை நமக்கு அனுப்பித் தந்த இறைத்தந்தையின் இரக்கத்தை புகழ்கிறோம். திருப்பலியின் துவக்க செபம், 'சபை மன்றாட்டு' என அழைக்கப்படுகிறது, ஏனெனில், இச்செபமே, நம் அனைவரின் தனிப்பட்ட செபங்களையும் ஒன்றிணைத்து, மூவொரு கடவுளிடம் சமர்ப்பிக்கிறது. 'செபிப்போமாக' என அருள்பணியாளர் அழைப்பு விடுத்தவுடன், நம் இதயங்களைத் திறந்து, நம் தனிப்பட்ட தேவைகளை இறைவன்முன் கொணர உதவும் பொருட்டு, சிறிது நேர அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலாற்றில் இறைவன் நமக்கு வெளிப்படுத்தியுள்ள அன்பெனும் கொடைக்காக, நாம் இந்த சபை மன்றாட்டில், அதாவது, துவக்க செபத்தில் நன்றி கூறுகிறோம். அதைத் தொடர்ந்து, கிறிஸ்துவில் நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழும் முயற்சியில் தொடர்ந்து நமக்கு உதவ வேண்டும் என இறைவனிடம் இறைஞ்சுகிறோம். பழங்கால பாரம்பரியத்தின்படி, இந்த செபம், தூய ஆவியானவரில், மகன் வழியாக தந்தையாம் இறைவனை நோக்கி எழுப்பப்படுகிறது. இந்த வளமான செபங்களை ஆழமாகத் தியானித்து, திரு அவையுடன் ஒன்றிணைந்து இறைவனை நோக்கி அவைகளை எழுப்புவதன் வழியாக, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும், திருவழிபாடு என்பது எவ்வாறு, செபத்தின் உண்மையான பள்ளியாக மாறுகிறது என்பதைக் காண்கிறோம்.

இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.