2018-01-06 15:19:00

இயேசுவை நோக்கியபடி பயணத்திற்குப் புறப்படுவோம்


சன.06,2018. பல நேரங்களில் அன்பின்றி வெறுமையாக இருக்கும் நம் கைகளை இன்று நோக்குவோம் என்றும், ஆண்டவரை மகிழ்ச்சிப்படுத்தும், கைம்மாறு கருதாமல் இலவசமாகக் கொடுக்கக்கூடிய சில கொடைகள் பற்றி இன்று நினைத்துப் பார்ப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சனவரி 06, இச்சனிக்கிழமை காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடுப்பதில் கிடைக்கும் இன்பத்தைக் கண்டுணர்வதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்று கூறினார்.

பெத்லகேமில் பிறந்திருந்த யூதரின் அரசரைக் காண்பதற்கு கிழக்கிலிருந்து வந்த  மூன்று ஞானிகள், விண்மீனைக் கண்டார்கள், பயணம் மேற்கொண்டார்கள் மற்றும், பரிசுகளைக் கொண்டு வந்தார்கள் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான வாழ்வு  வாழ்வதற்கு, மிகச்சிறந்த குறிக்கோளும், எப்போதும் மேல்நோக்கிப் பார்ப்பதும் அவசியம் என்பதை, இந்த ஞானிகள் புரிந்துகொண்டனர் என்று கூறினார்.

இந்த ஞானிகள் பார்த்த விண்மீனைக் கண்ட எல்லாருமே அந்த விண்மீனைப் பின்தொடரவில்லை என்றும், ஒருவேளை இந்த விண்மீன், மற்ற விண்மீன்களைவிட ஒளியில்லாமல் இருந்திருக்கலாம் என்றும், ஞானிகள் கண்ட இயேசுவின் விண்மீன், மினுமினுப்பாக இல்லாமல், கனிவாக நம்மை அழைக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

மேலும், இந்த ஞானிகள், விண்மீனைப் பார்த்ததும் பயணம் மேற்கொண்டனர், இவர்களின் இச்செயல், இயேசுவைக் காண்பதற்கு இன்றியமையாதது என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவைக் காண்பதற்குரிய பயணத்தை மேற்கொள்வது எளிதல்ல, ஆயினும், இந்தப் பயணத்தைத் தொடர்வதற்கு, வாழ்வில் தடையாக இருக்கும் பயனற்ற மற்றும் தேவையற்ற சுமைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வது அவசியம் என்றும் கூறினார்.

நீண்ட பயணத்தை மேற்கொண்ட இந்த ஞானிகள், பயணத்தின் இறுதியில் பரிசுகளைக் கொண்டுவந்து கொடுத்தார்கள் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, எதையும் திரும்பிக்கொடுக்க இயலாதவர்களுக்குக் கொடுப்பது, இயேசுவுக்கு விருப்பமானது என்று கூறினார். தேவையில் இருப்போர், கைதிகள், அந்நியர், ஏழைகள், நோயுற்றோர், பசித்திருப்போர் போன்றோர், நாம் கொடுப்பதைத் திருப்பித்தர இயலாதவர்கள் என்றும் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.