2018-01-02 12:32:00

விவிலியத்தேடல் : புதுமைகள் - அறிமுகம்


கடந்த ஆண்டு முழுவதும் நாம் மேற்கொண்ட விவிலியத் தேடல் பயணத்தில் யோபு நூலில் கூறப்பட்டுள்ள உண்மைகள் நம்மை வழிநடத்தின. இவ்வாண்டு, நம் தேடல் பயணம், நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகள் பக்கம் திரும்புகிறது.

புத்தாண்டு மலர்ந்துள்ள இவ்வேளையில், புதுமைகளைப்பற்றி சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது. நம்மிடையே பகிர்ந்துகொள்ளப்படும் புத்தாண்டு வாழ்த்துக்களில், புதுமை என்ற சொல், பல்வேறு வடிவங்களில் இடம்பெறுவதை உணர்ந்திருப்போம். கடந்து சென்ற ஆண்டை திரும்பிப் பார்க்கும்போதும், நம்மை வியப்பில், மலைப்பில், பிரமிப்பில் ஆழ்த்திய நிகழ்வுகளை இப்போது அசைபோட்டுக்கொண்டிருக்கிறோம். இந்நிகழ்வுகளை, அதிசயம், ஆச்சரியம், அற்புதம், அபாரம் என்ற சொற்களால் விவரிக்க முயல்கிறோம். இத்தருணத்தில், நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத் துவக்குகிறோம்.

குழந்தைப் பருவத்தில், நம்மை வியப்பில், பிரமிப்பில் ஆழ்த்திய தருணங்கள் அதிகம் இருந்தன என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறோம். வயது வளர, வளர, நமது வியப்பும், பிரமிப்பும் குறைந்து போகிறது. சலிப்பும், சந்தேகங்களும் நம்மைச் சூழ்ந்துகொள்கின்றன. அதேபோல், மனித வரலாறு, குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, இயற்கையில் நிகழ்ந்தது அனைத்தும், மனிதர்களை வியப்பில் ஆழ்த்தின. இயற்கையின் சக்திகளாக வெளிப்பட்ட இடி, மின்னல் போன்றவற்றையும், இயற்கையின் கொடைகளான மலை, கடல் போன்றவற்றையும், தெய்வங்களாக வழிபட்டனர், நம் முன்னோர். ஆனால், அறிவியலில் நாம் வளர்ந்தபிறகு, நமது வியக்கும் திறமை குறைந்துவிட்டதென்று தோன்றுகிறது. அனைத்திற்கும் விளக்கம் கூறமுடியும் என்ற ஆணவம் நம்மிடையே வளர்ந்து வருவதால், புதுமைகள் குறைந்து வருகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

"புதுமைகளின் காலம் முடிந்துவிட்டதா?" (Has the Day of Miracles Ceased?) என்ற தலைப்பில், இணையத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரை, புதுமைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். டொனால்ட் ஹால்ஸ்டிராம் (Donald Haalstrom) என்பவர், 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கிய ஓர் உரை, கட்டுரை வடிவில் வெளியாகியுள்ளது. இந்த உரையின் துவக்கத்தில் ஹால்ஸ்டிராம் அவர்கள், தான் அண்மையில் சந்தித்த கிளார்க் பாலெஸ் (Clark Fales) என்பவருக்கு ஏற்பட்ட ஓர் அற்புத அனுபவத்தை விவரிக்கிறார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் வாழும் கிளார்க் அவர்களும், இன்னும் 30 பேரும் கலிபோர்னியாவின் ஷாஸ்ட்டா (Shasta) என்ற எரிமலையின் உச்சியை அடையும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சிக்காக, அக்குழுவினர் பல மாதங்களாகப் பயிற்சி பெற்று வந்தனர். இறுதியில், அவர்கள் 14,180 அடி உயரமுள்ள அந்தச் சிகரத்தை அடைந்தனர். அவர்களில், கிளார்க் அவர்கள் முதலில் அச்சிகரத்தை அடைந்தார்.

வெற்றிக் களிப்பில் சிறிது நேரம் ஓய்வெடுத்த கிளார்க் அவர்கள், அச்சிகரத்தின் மறுபக்கம் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்ய சென்ற வேளையில், திடீரென தடுமாறி விழுந்தார். 40 அடி உயரத்திலிருந்து பின்புறமாக விழுந்த கிளார்க் அவர்கள், மேலும் ஒரு 300 அடிக்குமேல் மலைச்சரிவில் தாறுமாறாக, புரண்டு, புரண்டு சென்றார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து நிகழ்ந்தவற்றை, கிளார்க் அவர்கள், புதுமை என்று விவரிக்கிறார். ஏறத்தாழ 350 அடி விழுந்து, புரண்டு சென்றவரை, ஒரு பாறை தடுத்து நிறுத்தியது. அந்நேரம் அவ்வழியே, மலையுச்சியை அடைவதற்கு மற்றொரு குழு ஏறிக்கொண்டிருந்தது. அக்குழுவில், மலையேறுபவர்களுக்கு பயிற்சியளிப்பவர்களும், அவசர மருத்துவ உதவி செய்யத் தெரிந்தவர்களும் இருந்ததால், கிளார்க் அவர்களுக்கு முதலுதவிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதே குழுவிடம், அவசர உதவி கோருவதற்கென பயன்படுத்தப்படும் புதுவகை தொடர்பு சாதனக் கருவிகள் இருந்தன. இக்கருவிகளின் சக்தியை சோதனை செய்வதற்கென அவற்றை, அக்குழுவினர், முதன்முறையாக எடுத்து வந்திருந்தனர். அக்கருவிகள் சக்தி மிகுந்தவையாக இருந்ததால், கிளார்க் விபத்துக்குள்ளான சில நிமிடங்களில் அப்பகுதிக்கு, 'ஹெலிகாப்டர்' விரைந்து வந்தது. கிளார்க் அவர்கள் விழுந்திருந்த சரிவில் காற்று பலமாக வீசியதால், ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இரண்டு முறை அவ்விடத்தை ஹெலிகாப்டர் வட்டமடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென, அங்கு வீசிக்கொண்டிருந்த காற்று நின்றதால், ஹெலிகாப்டர் மலைச்சரிவில் இறங்கி, கிளார்க் அவர்களை மருத்துவமனைக்கு ஒரு மணி நேரத்தில் கொண்டு சேர்க்க முடிந்தது.

மருத்துவமனையில் சோதனைகள் நிகழ்ந்தன. கிளார்க் அவர்களின், கழுத்து, முதுகுத்தண்டு, மார்புப் பகுதி, இடுப்பு அனைத்திலும் எலும்புகள் பல முறிந்திருந்தன. மார்புப்பகுதியில் உடைந்த ஓர் எலும்பு, அவரது நுரையீரலைக் குத்திக் கிழித்திருந்தது.

கிளார்க் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, கலிபோர்னியாவிலேயே தலைசிறந்த மருத்துவர் அன்று அந்த மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. அவர் வழக்கமாக, ஆண்டிற்கு நான்கு முறை மட்டுமே அந்த மருத்துவமனைக்குச் செல்வார்.

கிளார்க் அவர்களின் நிலையைக் கண்ட அந்த மருத்துவர், அவர் உயிரோடு இருப்பதே பெரிய அதிசயம் என்று கூறினார். முதுகுத்தண்டில் இத்தனை இடங்களில் முறிவுகள் இருக்கும் ஒருவர், இவ்வளவு நேரம் உயிரோடு இருப்பதை தன் மருத்துவ அனுபவத்தில் முதல் முறை காண்பதாகக் கூறினார் அந்த மருத்துவர். தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை தெளிவாகக் கூறிய அந்த மருத்துவர், கிளார்க் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதை, மருத்துவ அறிவு கொண்டு விளக்க இயலாது என்று கூறினார்.

கிளார்க் அவர்களுக்கு நிகழ்ந்த இந்த பெரும் விபத்திலிருந்து அவர் உயிரோடு மீண்டு வந்தது மட்டுமல்ல, பெருமளவு குணமடைந்து, மீண்டும் தன் வாழ்வை அவரால் தொடர முடிந்தது. கிளார்க் அவர்களுக்கு நிகழ்ந்தவை அனைத்தும், மருத்துவ அறிவு கொண்டு விளக்கமுடியாத உண்மைகள் என்று, ஹால்ஸ்டிராம் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில், ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தவற்றை பல கோணங்களில் பார்க்க முடியும். கிளார்க் அவர்கள் விழுந்துகிடந்த பகுதியில் மற்றொரு குழு அவ்வேளையில் மலையேறிச் சென்றது; அந்தக் குழுவில், மருத்துவ உதவிகள் செய்யத் தெரிந்தவர்கள் இருந்தது; அவர்களிடம் சக்தி வாய்ந்த தொடர்புக் கருவிகள் கைவசம் இருந்தது; ஹெலிகாப்டர் இறங்குவதற்கு உதவி செய்யும் வண்ணம், வீசிக்கொண்டிருந்த காற்று நின்றுபோனது; கிளார்க் அவர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவ மனையில் புகழ்பெற்ற மருத்துவர், அவ்வேளையில் வந்து சேர்ந்தது… என்று, ஒவ்வொரு நிகழ்வாக அலசிப் பார்க்கும்போது, பல கொணங்களில் நம்மால் விளக்கம் அளிக்கமுடியும். இவற்றை, தற்செயலாக நிகழ்ந்தவை என்று தட்டிக் கழிக்கலாம். அல்லது, கிளார்க் அவர்கள் பிறந்த நாள், நட்சத்திரம் இவற்றை வைத்து கணக்கிட்டு, அவருக்கு நீண்ட ஆயுள் உள்ளது என்பதால், இவை நிகழ்ந்தன என்று கூறலாம்.

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடந்த இந்நிகழ்வுகள், தற்செயலாக நிகழ்ந்ததுபோல் தோன்றினாலும், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்த சக்தி இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட சக்தி என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சக்தியை நாம் இறைவன் என்று ஏற்றுக்கொள்ளும்போது, அவரது அருளால் நிகழும் அற்புத செயல்களை, நாம் 'புதுமை' என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

நம்மைச் சுற்றி ஒவ்வொரு நாளும், அற்புதங்கள், அதிசயங்கள், புதுமைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு இல்லாததால், அல்லது, நிகழும் அனைத்தையும் அறிவியல் விதிமுறைகளுக்கு உட்படுத்தி விளக்கம் தேடுவதால், புதுமைகளைப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகிறோம்.

1995ம் ஆண்டு, PBS எனப்படும் பொதுப்பணி தொலைக்காட்சியில் அறிவியல் ஆய்வாளர் ஒருவர் புதுமைகள்பற்றி பேசியபோது, "புதுமைகள் என்று ஒன்றுமில்லை. இயற்கையில் இதுவரை கண்டுபிடிக்க இயலாத விதிமுறையை நாம் புதுமை என்கிறோம்" என்று தன் பேட்டியில் கூறினார். நாம் காணும் உலகமனைத்தையும் அறிவியல் அளவுகோல் கொண்டு அளந்துவிட முடியும் என்று எண்ணுகிறவர்கள், இன்று உலகில் மலிந்துவருகின்றனர். இத்தகைய ஒரு கண்ணோட்டத்தால், புதுமைகளை வியந்து போற்றும் மனநிலையை நாம் படிப்படியாக இழந்து வருகிறோம். அனைத்தையும் விளக்கிக் கூறமுடியும் என்ற இறுமாப்பினால், விளக்கிக் கூற முடியாதவற்றிற்கும் அரைகுறையான விளக்கங்கள் தர முயல்கிறோம்.

இதற்கு மாறாக, வார இதழ் ஒன்றில், புதுமைகள் பற்றி வெளியான ஒரு கூற்று நம் கவனத்தில் பதிகிறது: “Coincidence is a miracle where God chooses to remain anonymous.” அதாவது, "தற்செயலாக நிகழ்ந்தது என்று நாம் சொல்வது, ஒரு புதுமை. அங்கு, இறைவன் தன்னை மறைத்துக்கொள்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது. நிகழ்வன எதுவும் இறைவனின் கட்டுப்பாட்டிற்கு வெளியே நிகழ்வதில்லை. ஒரு சில  வேளைகளில், மனித வாழ்வில், இவ்வுலகில், இயற்கையைத் தாண்டிய பல நிகழ்வுகள் நடைபெறும் வேளையில், அவற்றில் இறைவனின் கரம் செயலாற்றுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள பணிவுள்ள மனம் தேவை. இந்தப் பணிவு, நாம் தொடரவிருக்கும் தேடல் பயணத்திற்கு அடித்தளமாக அமையவேண்டும். பணிவு நிறைந்த உள்ளத்துடன், இயேசு ஆற்றிய புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத் துவக்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.