2018-01-01 15:29:00

புத்தாண்டு நாள் - திருத்தந்தையின் மூவேளை செப உரை


சன.01,2018. சனவரி 1, புத்தாண்டு நாளன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, காலை வணக்கம்! ஆண்டின் முதல் நாளன்று, இறைவனின் தாயான மரியாவின் திருநாளை இறைவன் வழங்க, அதை நமக்கு திருஅவை வழங்கியுள்ளது. இன்றைய நற்செய்தி, (லூக்கா 2: 16-21) நம்மை மீண்டும் பெத்லகேம் தொழுவத்திற்கு அழைத்து வந்துள்ளது. இடையரும் பிறரும் தாங்கள் கண்டதைப் பற்றி வியந்துகொண்டிருந்த வேளையில், "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்." (லூக்கா 2:19) கிறிஸ்மஸ் விழாவை, வெளிப்புறமாக மட்டுமல்ல, உள்ளத்தில் உணரவேண்டும் என்பதை மரியா நமக்கு உணர்த்துகிறார்.

மரியா, உடல் அளவில், இயேசுவின் தாய் என்பது மட்டுமல்ல, தன் நம்பிக்கையால், அவர், இயேசுவின் முதல் சீடராகவும் இருந்தார். இதே நம்பிக்கை கானா திருமணத்தில், இயேசுவை, முதல் புதுமை ஆற்றவைத்தது. இதே நம்பிக்கை, கல்வாரியில், சிலுவையடியில், மரியாவை நிற்கவைத்தது; தூய ஆவியாரின் வருகையின்போது, சீடர்களோடு இணைந்து செபிக்கவைத்தது.

இன்றைய உலகின் துயரங்கள், குறைபாடுகள் நடுவே, மனிதர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே தன்னையே நிறுத்துகிறார், அன்னை மரியா. உலக அமைதி நாளன்று, வலுவற்ற மக்கள் சார்பில் அன்னை மரியா பரிந்து பேசுகிறார்.

"குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர்: அமைதியைத் தேடுகின்றவர்கள்" என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படும் உலக அமைதி நாளில், அமைதி தேடி தங்கள் வாழ்வைப் பணயம் வைத்து, மிகக் கடினமான பயணங்களை மேற்கொள்வோரை எண்ணிப் பார்க்கிறோம்.

அமைதியைத் தேடி, அவர்கள் உள்ளத்தில் எரிந்துகொண்டிருக்கும் நம்பிக்கைச் சுடரை நாம் அணைத்துவிடக் கூடாது. ஒருவரையொருவர் வரவேற்று, ஆதரவு தரும் உலகை உருவாக்க இந்தப் புதிய ஆண்டில் நாம் அனைவரும் உழைப்பதற்கு இறைவன் வரமருள்வாராக! துவங்கியிருக்கும் 2018ம் ஆண்டை, இறைவனின் தாயும் நம் தாயுமான மரியாவிடம் ஒப்படைப்போம்.

இவ்வாறு, தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுரையின் இறுதியில், புத்தாண்டையொட்டி, தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த இத்தாலிய அரசுத்தலைவருக்கு தன் நன்றியைக் கூறினார். இத்தாலிய மக்கள் அனைவருக்கும் இவ்வாண்டு, அமைதி நிறைந்த ஆண்டாக இருக்கவேண்டும் என்று வாழ்த்தினார். சான் எஜிதியோ, இத்தாலிய காரித்தாஸ், Pax Christi ஆகிய அமைப்புக்கள், உலக அமைதி நாளையொட்டி, ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்வுகளுக்காக திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார்.

கூடியிருந்த அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.