2017-12-29 14:37:00

பாசமுள்ள பார்வையில்...: எதை தேடிக்கொண்டிருக்கிறோம்?


நகரத்திற்கு வந்து இன்றோடு மூன்று மாதங்களாகி விட்டன. கோகிலாவுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை. 45 வயது வரை தான் காணாத பல அதிசயங்களை இங்கு அவர் சந்தித்தார். கணவனை இழந்தபின், தன் மகனின் அழைப்பை ஏற்று, நகரத்திற்கு வந்த கோகிலா, அதை நரகமாகத்தான் பார்த்தார். மகனுடன் அமைதியாக அமர்ந்து பேசக்கூட நேரமில்லை. இரவு ஒன்பது மணிக்கு வந்து, காலையில் அவசரம் அவசரமாக கிளம்பி, 8 மணிக்கே வீட்டைவிட்டு ஓடும் மகனைப் பார்க்கும்போதெல்லாம் வயிறு பற்றிக்கொண்டு வந்தது. எதற்கு இந்த அவசரம்? எதற்காக ஓடி, ஓடி, சம்பாதிக்க வேண்டும்? கிராமத்தில் கழனியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இழந்த எந்த சுகத்தை இப்போது பெற்றுவிட்டோம்?, என குழம்பினார். அன்று மாலை, மகன் வந்து சாப்பிட்டு முடித்து, தூங்கப் போவதற்கு முன், அவனிடம் சிறிது நேரம் பேசுவதாகச் சொன்னார் தாய். வியப்பாக தாயை உற்று நோக்கிய மகன், அங்கேயே அமர்ந்தான். தாய் சொன்னார், 'நீ கடனுக்கு வாங்கிய இந்த வீட்டுக்கும், காருக்கும் லோன் அடைத்தே சம்பளம் சரியாக இருக்கிறது என்று சொன்னாயே. இன்னும் எத்தனை காலம் இப்படியே ஓடிக்கொண்டிருக்கப் போகிறாய்? இனிமேல் திருமணம் புரிந்து, குழந்தைகள் பெற்று, அவர்களின் படிப்புச் செலவுக்கென ஒதுக்கி, வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டேயிருக்கப் போகிறாயா? கிராமத்தில் நமக்கு பெரிய வீடு இருக்கிறது? நாலஞ்சு வயல் இருக்கிறது. பால் தர மாடு இருக்கிறது. காய்கறித் தோட்டம் இருக்கிறது. அங்கு வந்து, வயலில் இறங்கி, உன்னை உழச் சொல்லவில்லை. ஆனால், அங்கு கிடைக்காத எது இங்கு உனக்கு கிடைத்திருக்கிறது எனச் சொல்வாயா?, என்று. உயர்ந்த கல்வி, நல்ல மருத்துவர்கள், உணவு, என எல்லாமே இங்குதானே கிடைக்கிறது, என்றான் மகன். அது சரிதான். டின்னில் அடைத்து எல்லாம் கிடைக்கும், கிராமத்தில் இலவசமாக கிடைத்த பல சேவைகள், இங்கு கட்டணத்திற்கு கிடைக்கும். கெட்டுப் போகாமல் இருக்க வேதியப்பொருட்கள் கலந்த பால், பழங்கள், கிடைக்கும். சுத்தமான காற்றுக்கு எங்கு போவாய்? வேப்பமர நிழலுக்கு எங்கு போவாய்? எல்லாம் கிடைக்கும்போது, தாய்ப் பாசத்தையும் விலை கொடுத்தே வாங்கிக்கொள். நான் நாளை ஊருக்குப் போகிறேன், என்றார் தாய். தன் தாய் உட்பட, தன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிராமத்தில் இருக்கும்போது, நகரத்தில் எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என சிந்திக்கத் துவங்கினான் மகன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.