2017-12-29 14:57:00

இயேசுவைப் போன்று இருப்பதற்கு தன்னடக்கம் அவசியம்


டிச.29,2017. “இதயத்தில் கனிவும், மனத்தாழ்மையும் கொண்ட இயேசுவைப் போன்று இருப்பதற்கு விரும்பும் எவருக்கும், தன்னடக்கம் இன்றியமையாத பண்பாகும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியானது.

மேலும், துருக்கி நாட்டு அரசுத்தலைவர் Recep Tayyip Erdoğan அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், இவ்வெள்ளி காலையில் தொலைப்பேசியில் கலந்துரையாடினார் என்று, திருப்பீட உதவி செய்தித் தொடர்பாளர், Paloma Garcia Ovejero அவர்கள் அறிவித்தார்.

இன்னும், இத்தாலியின் லத்தீனா சிறையிலுள்ள கைதிகளுக்கு, கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களையும், செபங்களையும் அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றுகின்றவரும், திருத்தந்தையோடு மிக நெருக்கமாகப் பணியாற்றுகின்றவர்களில் ஒருவருமான பேரருள்திரு Yoannis Lahzi Gaid அவர்கள், லத்தீனா சிறைக்கு நேரிடையாகச் சென்று, திருத்தந்தையின் இவ்வாழ்த்துக்களை, கைதிகளுக்கு வழங்கினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லத்தீனாவில், கிறிஸ்மஸ் திருப்பலியை நிறைவேற்றிய பேரருள்திரு Gaid அவர்கள், நான்கு வகையான மக்கள் பற்றிப் பேசி, சிறைச்சாலை, கிறிஸ்மஸ் குடிலாக, எப்போது மாறும் என்பதை, மறையுரையில் விளக்கினார்.

தங்கள் வாழ்விலும், தொழிலிலும் மட்டுமே ஆர்வம்கொண்டு வாழ்கின்ற மக்களுக்கு கிறிஸ்மஸ் அர்த்தமற்றதாய் இருக்கும் என்றும், கடவுள் இவ்வுலகில் பிறப்பதற்கு, தாழ்மையும் எளிமையும் நிறைந்த மனிதர்களையே தேர்ந்தெடுக்கிறார் என்றும் உரையாற்றிய, பேரருள்திரு Gaid அவர்கள், உண்மையில், கடவுள் தாழ்ச்சியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார், ஏனெனில், அவர்கள், எதிர்மறையான அனுபவங்களைக்கூட, அக அமைதிக்குரிய வாயிலாக மாற்றத் தெரிந்தவர்கள் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.