2017-12-28 15:22:00

பெத்லகேமின் எளிமை, நம் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் அழைப்பு


டிச.28,2017. நம் உள்ளங்கள் இறைவனை நம்பிக்கையுடன் வரவேற்கும் தீவனத் தொட்டிகளாக மாறவும், நமது வறுமையிலிருந்து, நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்பு ஆகிய முளைகள் வளரவும் இறைவன் வரமருள வேண்டும் என்று இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

நம் கவனத்தை திசைதிருப்பும் கூச்சல்கள் நிறைந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே, "வந்து இந்தக் குழந்தையைப் பாருங்கள்" என்று அழைக்கும் மெல்லிய குரல் ஒலிக்கிறது என்று கூறும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், பெத்லகேமின் எளிமை நம் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் அழைப்பு என்று எடுத்துரைத்தார்.

இந்தக் குழந்தையை உடல் கண்களால் காண்பதைவிட, நம்பிக்கையின் கண்களால் காணும்போது, வாழ்வைப் பற்றிய நம் கண்ணோட்டம் மாறுவதற்கு வாய்ப்புண்டு என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களின் செய்தி கூறியுள்ளது.

நம்பிக்கையும், அன்பும் உள்ளத்தின் மொழிகள் என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், நமக்கு நெருங்கியவர்களோடு, அவர்கள் நமக்கருகே இல்லையெனினும், அவர்களோடு கரம் கோர்த்து, நாம் கிறிஸ்மஸ் குடிலை நாடுவோம் என்று, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார். 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.