2017-12-27 15:27:00

சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தையின் கிறிஸ்மஸ் செய்தி


டிச.27,2017. இருளின் மீது ஒளியும், போரின் மீது அமைதியும், வெறுப்பின் மீது அன்பும் வெற்றி கொண்டதை, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் நாம் கொண்டாடுகிறோம் என்று அந்தியோக்கு சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, மூன்றாம் இக்னாஸ் யூசெப் யூனான் அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

"வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" (யோவான் 1:14) என்ற சொற்களுடன் துவங்கும் மூன்றாம் யூனான் அவர்களின் செய்தி, லெபனான், சிரியா, ஈராக், புனித பூமி, ஜோர்டான், எகிப்து, துருக்கி, இன்னும் அனைத்து உலகிலும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறி ஆரம்பமாகிறது.

லெபனான் நாட்டின் சில பகுதிகளில் இருந்த தீவிரவாத குழுக்களை அப்புறப்படுத்தினாலும், அந்நாட்டில் தங்கியுள்ள இருபது இலட்சம் புலம்பெயர்ந்தோர், நாட்டின் பொருளாதார நிலைக்கு பெரும் பாரமாக அமைந்துள்ளனர் என்று, முதுபெரும் தந்தை மூன்றாம் யூனான் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் கிறிஸ்தவ ஆலயங்களில், கிறிஸ்மஸ் விழாவையொட்டி ஒலித்த கோவில் மணிகள் மனதிற்கு மகிழ்வைத் தந்துள்ள அதே வேளை, அந்நாட்டிலும், சிரியா நாட்டிலும் முழுமையான அமைதியும், முன்னேற்றமும் நிலவ அனைவரும் செபிக்கவேண்டும் என்று, முதுபெரும் தந்தை மூன்றாம் யூனான் அவர்களின் கிறிஸ்மஸ் செய்தி அழைப்பு விடுக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.