2017-12-27 15:49:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 6


டிச.27,2017. கிறிஸ்தவ வரலாற்றில் முதன் முதலாக நடந்த நீசேயா பொதுச் சங்கத்தில் வரையறுக்கப்பட்ட விசுவாச அறிக்கையைப் பாதுகாத்து, காப்பாற்றியவர்களில், புனித பெரிய பேசில், அவரின் சகோதரரான, நீசா நகர் புனித கிரகரி, புனித பெரிய பேசிலின் ஆயுள்கால நண்பரான நாசியானுஸ் நகர் புனித கிரகரி ஆகிய மூவரும் முக்கியமான திருஅவைத் தந்தையர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் மூவரும், மூன்று கப்பதோக்கியர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். நாசியானுஸ் நகர் புனித கிரகரி, தற்போதைய துருக்கி நாட்டிலுள்ள கப்பதோக்கிய மாநிலத்தில், நாசியானுஸ் என்ற நகரத்தில், மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவக் குடும்பத்தில், கி.பி.329ம் ஆண்டில் பிறந்தார். இவரது தாய், புனித நோனா (Saint Nonna August 5), மிகவும் பக்தியுள்ளவர். தனக்கு ஒரு மகன் பிறந்தால், அவனை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகச் செபித்தார் நோனா. அதேபோல், தனக்குப் பிறந்த மகனை, இறைவனுக்கு அர்ப்பணித்து, அவருக்கு கிரகரி எனப் பெயரிட்டார் நோனா.

புனித கிரகரி அவர்கள், நாசியானுஸ், செசாரியா, அலெக்சாந்திரியா ஆகிய முக்கிய நகரங்களில் கல்வி பயின்றபின், ஏத்தென்ஸ் சென்று தனது படிப்பை முடிப்பதற்கு நினைத்தார். எனவே அலெக்சாந்திரியாவிலிருந்து கிரேக்க நாட்டிற்கு கப்பல் ஏறினார். அச்சமயத்தில் கப்பல் கடும் புயலில் சிக்கியது. திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னரே தான் கடலில் மூழ்கி இறந்து விடுவேனோ என்று அஞ்சிய கிரகரி, இறைவனிடம் உருக்கமாகச் செபித்தார். தன் வாழ்வை முழுமையாய் இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார். இறுதியில் இருபது நாள்கள் கப்பலில் இருந்த பின்னர் உயிர்பிழைத்தார் அவர். ஏத்தென்ஸ் நகரில் ஆறு ஆண்டுகள் தங்கி, சொற்பொழிவியல், கவிதையியல், புவியியல், வானியல் போன்ற பல துறைகளில் தேர்ச்சி பெற்றார் அவர். புனித பெரிய பேசிலும் ஏத்தென்சில் புனித கிரகரியுடன் கல்வி பயின்றார். அச்சமயத்தில்தான் அவ்விருவரும் உயிர் தோழரானார்கள். ஏத்தென்சில் இவர்கள் கல்வி கற்ற காலக்கட்டத்தில், பிற்காலத்தில் உரோமைப் பேரரசராகவும், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு முரணாகப் போதிப்பவராகவும் மாறிய ஜூலியன் மெய்யியல் படித்தார். புனித கிரகரி, ஏத்தென்சில் படிப்பை முடித்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், கி.பி.358ம் ஆண்டில், நாசியானுஸ் திரும்பி தன் பெற்றோருடன் வாழ்ந்தார். அச்சமயத்தில் நாசியானுஸ் ஆயராகப் பணியாற்றிய இவரது தந்தை கிரகரி, இவருக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றியதோடு, இவரது விருப்பத்திற்கு மாறாக அருள்பணியாளராகவும் திருநிலைப்படுத்தினார். இவரது தந்தை, இவரை ஆயராக்க முயற்சித்தபோது, போந்து நகரில், தனது நண்பர் புனித பேசில் வாழ்ந்த துறவு ஆதீனம் சென்று அங்கு வாழ்ந்தார். புனித கிரகரி திருமுழுக்குப் பெற்றபோது அவருக்கு வயது 33.

புனித கிரகரி, தன் சகோதரர் புனித செசாரியுஸ் இறந்தவுடன், மீண்டும் நாசியானுஸ் திரும்பி, தனது தந்தையின் மறைமாவட்டப் பணிகளில் தந்தைக்கு உதவியாக இருந்தார். அச்சமயத்தில் தலத்திருஅவை ஆரியனிச தப்பறைக் கொள்கைகளால் மிகவும் துன்புற்றது. விசுவாசக் கோட்பாட்டுக்கு தெளிவற்ற முறையில் விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றில் தல ஆயர் கையெழுத்திட்டதையொட்டி, விசுவாசிகள் ஆயருக்கு எதிராக எழுந்தனர். எனவே, புனித கிரகரி, தனது போதனைகளால், விசுவாசிகள், தங்களின் ஆயரோடு ஒப்புரவாகச் செய்தார். ஆயரான தனது தந்தையும், ஆரியனிசத் தப்பறைக் கோட்பாட்டிலிருந்து தெளிவுபெற்று, கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழமாக வேரூன்ற உதவினார் புனித கிரகரி. மேலும், கி.பி.378ம் ஆண்டில், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை Valentus காலமானதைத் தொடர்ந்து, ஆயர்கள் அவை, கான்ஸ்தாந்திநோபிள் திருஅவைக்கு உதவுமாறு புனித கிரகரியைக் கேட்டுக்கொண்டது. ஏனென்றால், கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையும், ஆரியனிசக் கொள்கையால் பாதிக்கப்பட்டிருந்தது. புனித கிரகரி, கான்ஸ்தாந்திநோபிள் சென்று, தனது திறமையால், தவறான கோட்பாடுகளைப் போதிப்பவர்களைத் தோல்வியுறச் செய்தார்.  கி.பி.379ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டில், புனித கிரகரி, புதிதாகத் திருஅவையில் சேருகின்றவர்களுக்கு திருமுழுக்கு அளித்துக்கொண்டிருந்தவேளையில், ஆரியனிசக் கொள்கையாளர்கள், கடுஞ்கோபத்துடன் ஆயுதங்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்து ஓர் ஆயரைக் கொலை செய்தனர். புனித கிரகரியும் காயமுற்றார். ஆயினும், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மிகவும் உறுதியுடன் பாரம்பரிய விசுவாசக் கோட்பாடுகளைப் போதித்தார் புனித கிரகரி. இதனால் பலர் திருஅவைக்குத் திரும்பினர்.

கான்ஸ்தாந்திநோபிள் பேராயராகப் பணியாற்றிய நாசியானுஸ் புனித கிரகரி, திருஅவையின் மாபெரும் போதகராகவும், தந்தையாகவும், இறையியல் வல்லுனராகவும் போற்றப்படுகிறார். மறையுரைகள், கடிதங்கள், கவிதைகள் ஆகியவை வழியாக, கிறிஸ்து பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார். தனது இலக்கியப் புலமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, இறைவார்த்தையைப் போதிப்பதில் தன் வாழ்வைச் செலவழித்தார். இறையியலாளர் என மதிக்கப்படும் இவர், கி.பி.389ம் ஆண்டு சனவரி 25ம் நாளன்று காலமானார். இவரது உடல் நாசியானுஸ் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 950ம் ஆண்டில் கான்ஸ்தாந்திநோபிள் நகரில், திருத்தூதர்கள் ஆலயத்திற்கு இவரது உடல் எடுத்துவரப்பட்டது. பின்னர் இவரது சில புனிதப் பொருள்கள் உரோம் நகருக்கும் கொண்டுவரப்பட்டன.

நாசியானுஸ் நகரின் புனித கிரகரி சொன்னார் :“ஒரு பொருள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தேவையில் இருப்போருக்குக் கொடுங்கள். நம்மால் எவ்வளவு கொடுக்க இயலுமோ அதைக் கொடுக்கும்போது, அது தேவையில் இருப்போருக்குச் சிறியதாக இல்லை. அது இறைவனுக்கும் சிறியதாக இல்லை” என்று. எனவே தேவையில் இருப்பவருடன் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.