2017-12-26 14:55:00

சித்ரவதைகளால் துன்புறும் அனைவரையும் இன்று நினைவுகூர்வோம்


டிச.26,2017. “சித்ரவதைகளால் துன்புறும் அனைவரையும் இன்று நாம் நினைவுகூர விரும்புகிறோம். நம் பாசம் மற்றும் நம் செபங்களால் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதற்கு விரும்புகிறோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று கூறினார்.

மறைசாட்சியான புனித ஸ்தேவான் அவர்களின் விழாவான, டிசம்பர் 26, இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தங்களின் மத நம்பிக்கைகளுக்காகச் சித்ரவதைகளை எதிர்கொள்ளும் எல்லாரையும் நினைவுகூர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித ஸ்தேவான், திருஅவையில் முதன்முதலில் திருநிலைப்படுத்தப்பட்ட திருத்தொண்டர்களில் ஒருவரும், கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சியுமாவார்.

அக்காலத்தில், புனித ஸ்தேவான் அவர்களை, எருசலேம் நகரத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவர் மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்”என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்”என்று சொல்லி உயிர்விட்டார். இவ்வாறு, மறைசாட்சி புனித ஸ்தேவான் அவர்கள், கல்லால் எறிந்து கொல்லப்பட்ட நிகழ்வை, திருத்தூதர் பணிகள் நூல் பிரிவு 7, 59 மற்றும் 60ம் இறைச்சொற்றொடர்கள் கூறுகின்றன.

மேலும், கிறிஸ்தவ விசுவாசத்தோடு தொடர்புடைய சில காரணங்களுக்காக, உலகெங்கும், ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், கொல்லப்படுகின்றனர் என்று, கடந்த மே மாதத்தில் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவைக்கு ஆற்றிய வானொலி உரையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.