2017-12-23 14:57:00

திருவருகைக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


1980களில், ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள், மனித சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பின. Bob Geldof, Midge Ure என்ற இரு இசைக்கலைஞர்கள் தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்தனர். எத்தியோப்பிய மக்களை மனதில் கொண்டு, முக்கியமாக, அங்கு பட்டினியால் இறக்கும் குழந்தைகளை மையப்படுத்தி, 'இது கிறிஸ்மஸ் என்று அவர்களுக்கு தெரியுமா?' "Do They Know It's Christmas?" என்ற கேள்வியை எழுப்பும் ஒரு பாடலை இவர்கள் இயற்றினர். 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த அந்தப்பாடல், மிகப்பெரும் அளவில் பிரபலமானது. அந்தப் பாடலின் இசைத்தட்டுகள் விற்பனையில் கிடைத்த தொகையை இவ்விரு இசைக்கலைஞர்களும் எத்தியோப்பியாவிற்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், அவர்கள் மனம் திருப்தி அடையவில்லை. இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று எண்ணினர்.

எத்தியோப்பிய மக்களின் பட்டினியைப் போக்க நிதி திரட்டும் எண்ணத்துடன், Live Aid என்ற இசை விழாவை, இவ்விருவரும் ஏற்பாடு செய்தனர். மைக்கில் ஜாக்சன் உட்பட, பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த இசை விழா, 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இலண்டன் மாநகரிலும், ஃபிலடெல்ஃபியா மாநகரிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சி, செயற்கைக்கோள் வழியே, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யட்டது. அதுவரை, விளையாட்டுப் போட்டிகளும், திரைப்பட விழாக்களும் மட்டுமே, உலகின் பல நாடுகளில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்றாக, மனிதாபிமானம் மிக்க ஒரு முயற்சி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பானது, அதுவே முதல்முறை. 150 நாடுகளில் 190 கோடி பேருக்கும் மேற்பட்டோர் இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டனர் என்று சொல்லப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியால் திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1050 கோடி ரூபாய் நிதியுதவி, எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலகப் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் Paul McCartney. 1960களில் இசை உலகின் முடி சூடா மன்னர்களாக விளங்கிய Beatles என்ற இசைக்குழுவின் நால்வரில் இவரும் ஒருவர். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் இவர் பாடிய “Let It Be” என்ற பாடல், நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது. Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” என்ற பாடலின் பொருள் "அப்படியே ஆகட்டும்" அல்லது "அப்படியே இருக்கட்டும்". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:

"நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.

'அப்படியே இருக்கட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.

என் வாழ்வை இருள் சூழும் நேரங்களில் அவர் எனக்கு முன் நிற்கிறார்.

'அப்படியே இருக்கட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்" என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.

“Let It Be” என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம், தன் தாயே என்று, Paul McCartney அவர்கள், தன் பேட்டிகளில் கூறியுள்ளார். Paul McCartney அவர்களின் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் வரிகளில் அவர் Mother Mary என்று எழுதியிருப்பது பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகிறது. அதேபோல், “Let It Be” என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், இளம்பெண் மரியா அன்று வானதூதர் கபிரியேலிடம் சொன்ன  புகழ்பெற்ற வார்த்தைகளை நினைவுறுத்துகிறது. உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று சொன்ன பதிலும், இன்று நாம் வாசிக்கும் நற்செய்தியாக ஒலிக்கிறது.

எந்த ஒரு வரலாற்று நிகழ்வும், நூல்களில் பதிவாகும்போது, அந்நிகழ்வின் பெருமை, நம் கண் முன்னே அதிகம் தோன்றும். அந்நிகழ்வில் ஈடுபட்டோர் அடைந்த காயங்கள், பெருமளவு பேசப்படுவதில்லை. அதேபோல், விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளை, திருப்பலியில், வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம், ஆகிய உணர்வுகளே மேலோங்குவதால், அந்நிகழ்வுகளின் வேதனைகளையும், காயங்களையும், மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான், இன்று நாம் நற்செய்திப் பகுதியை வாசித்ததும், துணிவோடு "இது இறைவன் வழங்கும் நற்செய்தி" என்று சொல்லிவிட்டோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், வானதூதர் கபிரியேல், இளம்பெண் மரியாவிடம் இச்செய்தியைச் சொன்ன வேளையில், இது கட்டாயம் நல்லதொரு செய்தியாக இருந்திருக்க முடியாது என்பதை உணர்வோம்.

கிறிஸ்மஸ் நெருங்கி வரும் இந்நாட்களில் பல பள்ளிகளில், பங்குத் தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள், பெரும்பாலும், குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். இந்த நாடகங்களில் மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர், மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறப்பது, இடையரும், மூவேந்தரும் வந்து குழந்தையைப் பார்ப்பது, என்று... அரை மணி நேரத்தில், அழகழகான காட்சிகள் தோன்றி மறையும். இவற்றைப் பார்க்கும்போது மனம் மகிழும்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்று கேட்டார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது.

வரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, ஒளிமயமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலைப்பற்றி பல கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு அந்தச் சூழலிலிருந்து ஒரே ஒரு அம்சத்தைப்பற்றி சிந்திப்போம்.

யூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கம், அராஜகம் நடந்து வந்தது. இந்த அடக்கு முறையை உறுதி செய்வதற்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ, எந்த நேரத்திலும், இந்தப் பெண்களுக்கு, படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய படைகளால் அந்நாட்டுப் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைக் கேள்விப்பட்டோம். மியான்மார் நாட்டில், இரக்கைன் மாநிலத்தில், ரொஹிங்கியா இனத்தவர், அந்நாட்டு இராணுவத்தினால் அடைந்துவரும் கொடுமைகள், ஒவ்வொரு நாளும், நம் செய்தித்தாள்களில் இடம்பெறுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளவயது கிராமத்துப் பெண் மரியா.

தன் சொந்த நாட்டிலேயே, இரவும் பகலும் சிறையிலடைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா, "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்ட மாட்டாயா இறைவா?" என்று, தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடையளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனையை வழங்கும் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துச்சென்று, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. அவரது தோழிகளில் ஒரு சிலர், உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்றதால், ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொல்லப்பட்டதை மரியா பார்த்திருப்பார். இதோ, இதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை மரியா உணர்ந்தார். மணமாகாத தன்னை, தாய்மை நிலைக்கு கடவுள் அழைத்தது, பேரிடிபோல் மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.

இறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும்.. எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை, அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. தன் வழியாக, தனது சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மரியா, அந்த வாய்ப்புடன் வந்த பேராபத்தைப் பெரிதாக எண்ணாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு 'ஆகட்டும்' என்று பதில் சொன்னார். பெரும் போராட்டத்திற்குப் பின் வந்த பதில் அது.

 

இன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில், நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று மரியா சொல்லும் அந்த வார்த்தைகளே, இந்தப் பகுதி முழுவதையும் நற்செய்தியாக மாற்றியுள்ளது. இந்த நம்பிக்கை வரிகள் இல்லையெனில், இன்றைய விவிலிய வாசகத்தை நற்செய்தி என்று சொல்வது மிகக்கடினம். மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத வார்த்தைகள், இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில் நற்செய்தியாக ஒலித்துள்ளன.

1985ம் ஆண்டு Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” பாடல் வழியாக, மரியா சொன்ன அந்த அற்புத வார்த்தைகள், மீண்டும் பலருக்கு நற்செய்தியாக ஒலித்திருக்க வேண்டும். பசிக்கொடுமைகள், போர் கொடுமைகள், பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், சாதி, மதம், இனம் என்று பல்வேறு பாகுபாடுகளால் உருவாகும் கொடுமைகள்... என்று கொடுமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் இந்த உலகில், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு இல்லையா என்று மனம் கேள்விகளை எழுப்பும். Live Aid இசை நிகழ்ச்சியைக் கண்ட பலகோடி உள்ளங்களில், எத்தியோப்பியாவின் பட்டினிச்சாவுகள், பல கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு ஏதோ ஒரு வகையில் விடைதரும் வண்ணம் Paul McCartney பாடிய “Let It Be” என்ற இந்தப் பாடல் அமைந்ததென்று சொல்லலாம். நம்பிக்கையற்ற ஒரு சூழலை, நற்செய்தியாக மாற்ற, வானதூதரிடம், 'அப்படியே ஆகட்டும்' என்று சொன்ன மரியாவின் வார்த்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்பாடல், பலரது உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்திருக்கும்.

ஆப்ரிக்க நாடுகளில் இன்றும் பட்டினிச் சாவுகள் தொடர்கின்றன. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் அனைவருமே துன்பங்களால், துயரங்களால் துவண்டு போகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான ஒரு முடிவு, அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு, மரியாவின் 'ஆகட்டும்' என்ற முடிவு, ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது, அவரது சொந்த சக்தி அல்ல, மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த ஞாயிறு மாலை, அல்லது இரவு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு திருப்பலிகள் உலகெங்கும் நடைபெற்ற வண்ணம் இருக்கும். அமைதியின் இளவரசாகிய இயேசு பிறந்த பெத்லகேம், அவர் வாழ்ந்த எருசலேம் மற்றும் புனித பூமியின் பல பகுதிகள், இப்போது இறுக்கமான ஒரு சூழலில் உள்ளன. எருசலேமை, இஸ்ரேல் நாட்டின் தலைநகர் என்று, ஒரு தனி மனிதன், தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு நிலவும் மோதல்களும், உயிர் பலிகளும், நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றன.

டிசம்பர் 17, கடந்த ஞாயிறு பாகிஸ்தானின் Quetta என்ற ஊரில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ கோவிலில், வழிபாட்டின்போது நடைபெற்ற தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். எனவே, பாகிஸ்தானில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு உதவீயாக, ஆயுதம் தாங்கிய கிறிஸ்தவ இளையோர், கோவில்களைச் சுற்றி தயாராக உள்ளனர் என்று கேள்விப்படும்போது, நம் உள்ளங்கள் கலக்கம் அடைகின்றன.

இந்தியாவில், இந்து அடிப்படைவாதக் குழுக்கள், கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டங்கள் நடைபெறக் கூடாது என்ற எச்சரிக்கை விடுவதிலும், அக்கொண்டாட்டங்கள் நடைபெறுவதைத் தடை செய்வதிலும் மிகத் தீவிரமாக, ஈடுபட்டு வருவது நம் உள்ளங்களை வேதனையடையச் செய்துள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்துகொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே இறைவன் 'இம்மானுவேலாக' வாழ வந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவே அவர் மீண்டும் பிறக்கவேண்டும் என்று மன்றாடுவோம். 'இம்மானுவேலை' நம்மிடையே கொணர, இளம்பெண் மரியாவைப்போல, 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லும், நம்பிக்கையையும், துணிவையும், பணிவையும் நமக்கு இறைவன் வழங்கவேண்டும் என்று, அன்னை மரியாவின் பரிந்துரையோடு செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.