2017-12-22 15:13:00

பாலஸ்தீனிய மக்களுக்கு உறுதுணையாக கிறிஸ்தவர்கள்...


டிச.22,2017. கிறிஸ்து பிறப்பின்போது, இறைவன் மனிதருக்கு வகுத்த திட்டம் "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" (லூக்கா 2:14) என்ற சொற்கள் வழியே நம்மை வந்து சேர்ந்தது என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

ஈராக் நாட்டு மக்களின் நம்பிக்கை, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, திருஅவையின் பங்கு என்ற மூன்று கருத்துக்களில், முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், தன் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ISIS தீவிரவாதிகளிடமிருந்து மோசூல் நகர் மீட்கப்பட்ட பின்னர், அந்நகரையும், அங்கு வாழும் மக்களையும், பாகுபாடுகள் ஏதுமின்றி கட்டியெழுப்புவது, ஈராக் அரசின் மிக முக்கியக் கடமை என்று, முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், இச்செய்தியில் கூறியுள்ளார்.

மனதில் தளர்ச்சியை உருவாக்கும் எதிர்மறை எண்ணங்களை விலக்கி, கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் ஆர்வம் கொள்ள, கிறிஸ்து பிறப்பு காலம் தகுந்ததொரு தருணம் என்று, முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக, அநீதிகளால் துன்புறும் பாலஸ்தீனிய மக்களுக்கு, கிறிஸ்தவர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும், எருசலேம் நகரம், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் அனைவருக்கும் பொதுவான நகரமாக இருக்கவேண்டும் என்றும் விண்ணப்பித்து, முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், தன் கிறிஸ்மஸ்  செய்தியை நிறைவு செய்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.