2017-12-22 16:03:00

எருசலேம் பொதுவான நகரம் என்பதே திருப்பீடத்தின் நிலைப்பாடு


டிச.22,2017. ஒரே கடவுளை வழிபடும் மூன்று மதங்களின் பொதுவான புனித நகரமாக எருசலேம் விளங்குவதை, உலக அரசுகள் மதித்து, அந்த பொது நிலையைக் காப்பதற்கு உதவவேண்டும் என்பதே, திருப்பீடத்தின் நிலைப்பாடு என்று, ஐ.நா. பொது அவையில் திருப்பீடத்தின் சார்பில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் தலைநகர் என்று, அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அறிவித்ததையடுத்து எழுந்துள்ள குழப்பங்களை தீர்க்கும் ஒரு முயற்சியாக, ஐ.நா.பொது அவை, டிசம்பர் 21, இவ்வியாழனன்று நடத்திய 10வது அவசரக் கூட்டத்தில், திருப்பீடம், இந்த அறிக்கையை சமர்ப்பித்தது.

இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளை மையப்படுத்தி, ஐ.நா.அவை வெளியிட்டுள்ள தீர்மானங்களை திருப்பீடம் ஆதரிக்கிறது என்றும், அவற்றில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றும், திருப்பீடம், தன் அறிக்கையில், வலியுறுத்திக் கூறியுள்ளது.

டிசம்பர் 21, இவ்வியாழனன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், ஐ.நா. பொது அவையின் உறுப்பினர்களான 193 நாடுகளில், டிரம்ப் அவர்களின் அறிக்கையை எதிர்த்து, சீனா, பிரான்ஸ், இரஷ்யா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 128 நாடுகளும், அவ்வறிக்கையை ஆதரித்து, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட, 9 நாடுகளும் வாக்களித்துள்ளன.

மேலும், கனடா, ஆஸ்திரேலியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும், 21 நாடுகள், வாக்கெடுப்பு நேரத்தில் அவையில் இல்லை என்றும் ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது. 

ஆதாரம் : Zenit / UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.