2017-12-22 15:39:00

எருசலேம் அப்போஸ்தலிக்க நிர்வாகியின் ஆண்டறிக்கை


டிச.22,2017. புனித பூமியில் பணியாற்றும் கிறிஸ்தவ சபைகளிடையே நிலவும் உறவு, இவ்வாண்டு மேம்பட்டுள்ளது என்பதை, இயேசுவின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்பட்ட தருணத்தில் உணர்ந்தோம் என்று, புனித பூமியில், அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றும் பேராயர், Pierbattista Pizzaballa அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியில், அவ்வாண்டைப் பின்னோக்கிப் பார்க்கும் வாய்ப்பு உள்ளதென்று கூறிய பேராயர் Pizzaballa அவர்கள், கிறிஸ்தவ சபைகளிடையே உருவாகியுள்ள சக்திமிக்க ஒருமைப்பாடு, இவ்வாண்டின் தனித்துவம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அண்மைய சில நாள்களாக எருசலேம் நகரைச் சுற்றி நிலவிவரும் பதட்டங்கள், திருப்பயணிகளின் வருகையைப் பாதித்துள்ளது என்பதை எடுத்துரைத்த பேராயர் Pizzaballa அவர்கள், திருப்பயணிகளின் வருகை, புனித பூமியில் வாழ்வோரின் நம்பிக்கையை வளர்க்கிறது என்று எடுத்துரைத்தார்.

அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு, மற்றவர்களைக் கட்டுப்படுத்தாது என்பதைத் தெளிவுபடுத்திய பேராயர் Pizzaballa அவர்கள், திருத்தந்தை கூறியுள்ளதுபோல், எருசலேமை, பொதுவான, புனித நகராகக் காண்பதே, கிறிஸ்தவர்களின் முடிவு என்று அறிவித்தார்.

மனிதர்களை அடக்கி, ஒடுக்கி, தன் முடிவை அவர்கள் மீது திணிக்கும்வண்ணம் கடவுள் இவ்வுலகிற்கு வரவில்லை; மாறாக, நம்மில் ஒருவராக, குழந்தையாக, அவர் வந்துள்ளார் என்பதே, நாம் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்மஸ் விழா மகிழ்வு என்று கூறி, பேராயர் Pizzaballa அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.