2017-12-21 15:43:00

வத்திக்கான் பணியாளருக்கு திருத்தந்தையின் கிறிஸ்மஸ் வாழ்த்து


டிச.21,2017. வத்திக்கானில் பணிபுரிவோரையும், அவர்களின் குடும்பத்தினரையும் இவ்வியாழன் காலை திருத்தந்தை அருளாளர் 6ம் பால் அரங்கத்தில் சந்தித்து, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித குலத்திற்கு வேலை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

வேலையின் முக்கியத்துவம் பற்றி கூறியது, இன்னும் கடினமாக வேலை செய்யுங்கள் என்பதைச் சொல்வதற்காக அல்ல, மாறாக, நீங்கள் திருஅவைக்கு உங்கள் பணிகள் வழியே ஆற்றிவரும் பங்களிப்புக்கு நன்றி கூறவே என்று பணியாளர்களிடம், திருத்தந்தை விளக்கம் அளித்தார்.

எழுதிவைத்த உரை எதுவும் வழங்காமல், மனம் திறந்து பேசியத் திருத்தந்தை, உங்கள் பணிக்காக நன்றி கூறும் அதேவேளை, திருஅவை அதிகாரிகள், உங்களுக்குத் தவறான எடுத்துக்காட்டுகளாக இருந்திருந்தால், அதற்காக உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

சரியான விதிகள் கடைபிடிக்கப்படாமல், நிறுவனங்களின் இலாபத்தை மட்டும் மனதில் கொண்டு, பணியாளரின் நலன்களை புறம்தள்ளி, அவர்கள் வேலையில் அமர்த்தப்படுவதை, தான் எப்போதும் ஆதரிப்பதில்லை என்பதை தன் உரையில் தெளிவாக்கினார் திருத்தந்தை.

பணியாளர்களை நடத்தும் முறையில், தவறான வழிமுறைகளை திருஅவை பின்பற்றினால், சமூகப் படிப்பினைகள் குறித்த திருஅவைக் கோட்பாடுகளை அதனால் எவ்வாறு துணிந்து பறைசாற்ற முடியும் என்ற கேள்வியையும், திருத்தந்தை, தன் மனம் திறந்த பரிமாற்றத்தில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.