2017-12-21 15:55:00

திருத்தந்தையின் மறையுரை: கிறிஸ்தவர்கள் மகிழ்வில் வாழ்பவர்கள்


டிச.21,2017. கிறிஸ்தவர்கள் மகிழ்வில் வாழ்பவர்கள், அடக்கச் சடங்கில் பங்கேற்கும் சோக முகம் கொண்டிருப்பவர்கள் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இன்றைய நற்செய்தியில், மரியாவும், எலிசபெத்தும் பகிர்ந்துகொள்ளும் மகிழ்வான தருணங்களை சுட்டிக்காட்டி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

மீட்கப்பட்ட, மன்னிக்கப்பட்ட மக்களாய் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், அடக்கச் சடங்கில் பங்கேற்று திரும்பும் சோக முகம் கொண்டவர்களாக வாழ்வது கூடாது என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

"தங்களுக்கு மீட்பர் ஒருவர் இருக்கிறார் என்று அறிக்கையிடும் கிறிஸ்தவர்களின் முகங்களில் மீட்படைந்த மகிழ்வை நான் காண்பதில்லை" என்று கூறிய இறை நம்பிக்கையற்ற ஒரு தத்துவ இயலாளரைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, மீட்படைந்தோரின் அடிப்படை பண்பு, மகிழ்வு என்று எடுத்துரைத்தார்.

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் நற்செய்தியை வானதூதரிடமிருந்து கேட்ட இளம்பெண் மரியா, மகிழ்வுடன் விரைந்து சென்றது, நமக்கு ஓர் எடுத்துக்காட்டு என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.