2017-12-21 15:29:00

உரோமன் கூரியா பணியாளர்களுக்கு திருத்தந்தையின் கிறிஸ்மஸ் உரை


டிச.21,2017. பொய்யான, தீமையான, மேலோட்டமான அனைத்தையும் நீக்கிவிட்டு, உண்மையான, நல்லதான, ஆழமான, தேவையான அனைத்தையும் காண்பதற்கு, இந்த கிறிஸ்மஸ் காலம் நமக்கு உதவட்டும் என்ற வாழ்த்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் உழைப்போருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.

‘உரோமன் கூரியா’ என்றழைக்கப்படும் திருப்பீட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவை, டிசம்பர் 21, இவ்வியாழன் காலை, வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை, இக்குழுவில் பணியாற்றும் அனைவருக்கும் தன் நன்றியை முதலில் தெரிவித்துக்கொண்டார்.

உரோமன் கூரியாவில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் குறித்து தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, "உரோமையில் மாற்றங்கள் கொணர்வது, Sphinx எனப்படும் பிரம்மாண்டமான கிரேக்கச் சிலையை, பல்துலக்கும் 'பிரஷ்' கொண்டு சுத்தம் செய்வதுபோல" என்று, 19ம் நூற்றாண்டில் வத்திக்கானில் பணியாற்றிய Frédéric-François-Xavier de Mérode என்ற பேராயர் கூறிய சொற்களை மேற்கோள் காட்டினார்.

பல நூற்றாண்டுகளாக இயங்கிவரும் உரோமன் கூரியாவில், பணியாற்றுவோரிடையே நிலவும் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், மனநிலைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, மாற்றங்களைக் கொணர்வதற்கு, பொறுமை, திறமை, உறுதி ஆகிய குணங்கள் தேவைப்படுகின்றன என்பதை தன் உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருஅவையில் பணியாற்ற நிறுவப்பட்ட தியாக்கோன்கள் பற்றி தன் உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தியாக்கோன், ஆயரின் காதாக, வாயாக செயலாற்றவேண்டும் என்று திருத்தூது விளக்கங்கள் கூறியுள்ளதை நினைவுறுத்தினார்.

நம் உடலில் உள்ள காது, கேட்பதற்கு மட்டுமல்லாமல், உடலின் சமநிலையை காப்பதற்கும் உதவுகிறது என்பதையும், நமது வாய், சுவைப்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தியாக்கோன் குறித்த கூற்று நமக்கு நினைவுறுத்துகிறது என்று திருத்தந்தை தெளிவுபடுத்தினார்.

திருப்பீடத்தில் செயலாற்றிவரும் அனைத்து துறைகளும், மனித உடலைப்போல, ஒன்றோடொன்று ஒருங்கிணைந்து, திருத்தந்தையின் அதிகாரத்தை மதித்து, மக்களுக்குப் பணியாற்றுவதே அவற்றின் தலையாய கடமை என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

வத்திக்கானுக்கும், வெளி உலகத்திற்கும் இடையே தொடர்புகளை உருவாக்கும் பல்வேறு துறைகள், திருப்பீடத்தை, பாலங்கள் அமைக்கும் நிறுவனமாக, அமைதியையும், உரையாடலையும் வளர்க்கும் அமைப்பாக, இவ்வுலகிற்கு உணர்த்தி வருவதற்காக தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை.

திருப்பீடம் தனக்கென எந்த ஓர் ஆதாயத்தையும் தேடாமல், நல்மனம் கொண்ட அனைவரோடும் உழைப்பதற்கு மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளுடன், திருப்பீடச் செயலகத்தில் மூன்றாம் பிரிவு ஒன்றை இவ்வாண்டு துவக்கியுள்ளதைக் குறித்து திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

தன் உரையின் இறுதிப்பகுதியில், இளையோரை மையப்படுத்தி, வருகிற ஆண்டு நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கு கவனமாகச் செவிமடுப்பதன் வழியே, இவ்வுலகில் ஆண்டவர் பேசுவதை, திருஅவை மீண்டும் ஒருமுறை கேட்கவுள்ளது என்று எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நாட்டிலும் பணியாற்றும் தலத்திருஅவைகள், கீழை வழிபாட்டு முறை திருஅவைகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கி நடைபோடும் கிறிஸ்தவ சபைகள், மற்றும் யூதம், இஸ்லாம் உள்ளிட்ட ஏனைய மதங்கள் அனைத்தோடும் திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நம்மை வழிநடத்தும் நம்பிக்கை விண்மீன்களைத் தொடர்ந்து சென்றால், அரச மாளிகைகளில் அல்ல, மாறாக, எளியோர் வாழும் இடங்களில் நாம் ஆண்டவரைச் சந்திக்க முடியும் என்ற கருத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவுக்கு வழங்கிய உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.