2017-12-20 14:59:00

மறைக்கல்வியுரை : திருப்பலி துவக்க சடங்குகளின் முக்கியத்துவம்


டிச.,20,2017. தன் புதன் மறைக்கல்வி உரைகளில் திருப்பலி குறித்த கருத்துக்களை திருப்பயணிகளோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, துவக்க காலக் கிறிஸ்தவர்கள், எவ்வாறு தங்களுக்குரியதை பிறரோடு பகிர்ந்து, ஒன்றிப்பில் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறித்து எடுத்துரைத்தார். உரையின் துவக்கத்தில், திருத்தூதர் பணி நூலிலிருந்து பிரிவு 2, இறைவாக்கியங்கள் 42 முதல் 47 வரை வாசிக்கப்பட்டன. துவக்க கால கிறிஸ்தவர்களின் வாழ்வு முறை பற்றிய இப்பகுதி வாசிக்கப்பட்டபின், தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, திருப்பலி குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, திருப்பலிக் கொண்டாட்டத்தின் துவக்கச் சடங்குகள் குறித்து நோக்குவோம். திருப்பலியின் துவக்கச் சடங்குகள் என்பவை, முக்கியத்துவம் அற்ற ஒன்றல்ல, மாறாக, இறைவார்த்தையை நம்பிக்கையுடன் செவிமடுத்து, திருப்பலியில் சரியான முறையில் பங்கெடுக்க உதவுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டுச் செயல்பாடும், நாம் சிறப்பிக்க தயாரிக்கும் மறையுண்மைகளின் பொருள் பொதிந்த வெளிப்பாடுகளாக உள்ளன. திருப்பலிப் பீடத்தை அருள்பணியாளர் முத்தமிடும்போது, வாழும் கிறிஸ்துவுடன் கூடிய அன்பின் சந்திப்பே, திருப்பலி என்பது நமக்கு நினைவுறுத்தப்படுகின்றது. நாம் சிலுவை அடையாளத்தை வரையும்போது, இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்ட, தந்தை, மகன், தூய ஆவியாரின் அன்பில், நம் திருமுழுக்கின் வழியாக நாம் பங்கு கொண்டுள்ளதை நினைவுக்குக் கொணர்கிறோம். 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்ற வழிபாட்டு வாழ்த்துரையும், 'உம்மோடும் இருப்பாராக' என்ற நம் பதிலுரையும், நம்மை கிறிஸ்துவின் திரு உடலாகிய திருஅவையின் அங்கத்தினர்களாக ஒன்றிணைத்துக் கொணர்கிறது.  இங்கு நாம் நம் ஒவ்வொருவரின் கொடைகளுடன், புகழ் மற்றும் நன்றிக் கீதங்களின் ஒன்றிணைந்த இசையாக கையளிக்கிறோம். திருப்பலியின் பாவ மன்னிப்புச் சடங்கில், துவக்க சடங்குகள் தன் உச்சத்தை அடைகின்றன. இங்குதான், நாம் நம் பாவங்களை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் அருள் அடையாளக் கொண்டாட்டங்களின் வழியாக, இயேசுவுடன் இணைந்து, சாவிலிருந்து புதிய வாழ்வை நோக்கிச் செல்கிறோம்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் திருப்பயணிகளுக்கு வித்தைகளைக் காட்டி மகிழ்வித்த கியூபா சர்க்கஸ் வீரர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டதுடன், கிறிஸ்மஸ் கீதங்களை பாடியோருக்கு தன் நன்றியையும் தெரிவித்தார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.