2017-12-19 14:24:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 50


யோபு நூலின் 42 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 1070 இறை வாக்கியங்கள் வழியே கடந்த ஓராண்டளவாக தேடல் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளோம். இப்பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில், இந்நூலின் சில முக்கியமான இறை வாக்கியங்களை அசைபோட்டு, அவை நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைப் பயில முயல்வோம்.

யோபு நூல், துன்பத்தைப்பற்றி கூறும் நூல் என்பது, யூத, கிறிஸ்தவ பாரம்பரியங்களில், பொதுவாக நிலவிவரும் கருத்து. ஆனால், இந்நூல், துன்பத்தைப்பற்றி மட்டும் பேசவில்லை. நட்பு, நேர்மை, வாய்மை, நம்பிக்கை போன்ற வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தரும் ஒரு கல்விக்கூடமாக, யோபு நூல் விளங்குகிறது.

துன்பம் நம்மைச் சூழும்போது, கடவுள் இருக்கிறாரா, அப்படியே இருந்தால், அவர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார், இப்போது எங்கே மறைந்துவிட்டார் என்ற கேள்விகள் பல மனதில் குவியும். துன்பத்தையும், இறைவனையும் இணைத்து நாம் மேற்கொள்ளும் சிந்தனைகளில், மிக அதிகமான நெருடல்களை உருவாக்கும் ஒரு கேள்வி, மாசற்றவர்கள், நல்லவர்கள் ஏன் துன்புறவேண்டும் என்ற கேள்வி. இந்தக் கேள்வி, விவிலியத்தின் பல நூல்களில் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றில், யோபு நூல், இந்தக் கேள்வியை மிக ஆழமாகச் சிந்திக்க வழிவகுக்கிறது. இதோ, யோபு நூலின் அறிமுக வரிகள்...

யோபு நூல் 1: 1-3

ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.  அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர்.

யோபைக் குறித்த அறிமுக வரிகளில், 'மாசற்றவர்', 'நேர்மையாளர்', மற்றும் 'கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தவர்' என்ற சொற்றொடர்களைக் காண்கிறோம். அவரது பிள்ளைச் செல்வம், அவரது கால்நடைச் செல்வம் அனைத்தும் முழுமையான எண்களில் கூறப்பட்டுள்ளன. இறைவனிடமிருந்து நிறைவான ஆசீர் பெற்றவர் யோபு என்பதை சுட்டிக்காட்டவே, முழுமையான எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாசற்றவரும், நீதிமானுமாகிய யோபின் வாழ்வில் ஒன்றன்பின் ஒன்றாக துன்பங்கள் வந்து சேருகின்றன. இவை ஏன் நிகழ்ந்தன என்பதை, யோபு நூலின் ஆசிரியர், கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழும் ஓர் உரையாடல் வழியே விளக்க முயற்சி செய்கிறார். யோபு நூல் முதல் பிரிவில், ஆண்டவருக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழும் அந்த உரையாடல் (யோபு 1:6-12), நம் மனங்களில் ஆழமாகப் பதியவேண்டிய ஒரு முக்கியப் பாடத்தை உணர்த்துகிறது.

மனிதர்களாகிய நம்மிடையே உள்ள 'இருப்பது' (being), 'வைத்திருப்பது' (having) என்ற இரு நிலைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை, இவ்வுரையாடல், வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. தன் ஊழியன் யோபு, மாசற்றவராக, நேர்மையாளராக, தனக்கு அஞ்சி, தீமையை விலக்கி நடப்பவராக 'இருக்கிறார்' என்று இறைவன் பெருமிதம் கொள்கிறார். யோபு, அவ்விதம் 'இருப்பதற்கு' அவர் 'வைத்திருக்கும்' சொத்துக்களே காரணம் என்று, சாத்தான் காரணம் சொல்கிறான்.

நாம் 'இருப்பது' போல் நம்மைக் காண்பவர், ஏற்றுக்கொள்பவர் இறைவன் என்பதையும், நாம் 'வைத்திருப்பது' எவ்வளவு என்பதைக் கணக்கிடுவது, சாத்தான் என்பதையும், இந்த உரையாடல் நமக்குத் தெளிவாக்குகிறது. ஒருவர் நல்லவராக 'இருப்பது', அவர் 'வைத்திருக்கும்' செல்வங்களைப் பொருத்தது என்றும், அச்செல்வங்கள் பறிக்கப்பட்டால், அவர் நல்லவராக 'இருக்கமுடியாது' என்றும் சாத்தான் வாதிடுகிறான். அவனது வாதம் தவறானது என்பதை நிலைநாட்ட, யோபு 'வைத்திருக்கும்' செல்வங்களைப் பறித்துக்கொள்ள, இறைவன், சாத்தானுக்கு உத்தரவு வழங்குகிறார்.

உத்தரவு பெற்ற சாத்தான், யோபின் கால்நடைகள், பயிர்கள், பணியாளர்கள் என்று ஒவ்வொன்றாக அழிக்கிறான். இறுதியாக, யோபின் புதல்வர், புதல்வியரையும் சாத்தான் அழிக்கிறான். ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேர்ந்த துயரச் செய்திகளைக் கேட்ட யோபு, என்ன செய்தார், என்ன சொன்னார் என்பதை,  யோபு நூல், முதல் பிரிவின் இறுதி வரிகள் இவ்வாறு கூறியுள்ளன:

யோபு 1:20-22

யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, "என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.

நாம் துயரங்களை அனுபவிக்கும் வேளையில், நம்மை இறைவனிடம் மீண்டும், மீண்டும் அழைத்துவர, ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக! என்று யோபு சொல்லும் சொற்கள், துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைச் சொல்லித் தருகின்றன.

தன் உடைமைகளையும், உறவுகளையும் இழந்த யோபு, அத்துயரங்கள் நடுவிலும், "பாவம் செய்யவுமில்லை; கடவுள்மீது குற்றஞ்சாட்டவும் இல்லை" (யோபு 1:22) என்று முதல் பிரிவு நிறைவடைகிறது. யோபிடம் காணப்பட்ட இந்த உறுதி, இறைவனை, பெருமையடையச் செய்கிறது, சாத்தானையோ, அடுத்த திட்டம் தீட்ட வைக்கிறது. யோபின் உடலை வதைக்க, சாத்தான் முயற்சிகள் மேற்கொள்கிறான்.

"உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை" கொடிய துன்பம் தரும் நோயை யோபுக்குத் தருகிறான் சாத்தான். துன்பத்தால் நொறுக்கப்பட்ட யோபிடம் அவரது மனைவி, இறைவனைப் பழிக்கத் தூண்டுகிறார். அவருக்கு யோபு கூறும் பதில், உன்னத எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்குகின்றது:

யோபு 2:9-10

அப்போது யோபின் மனைவி அவரிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்றாள். ஆனால் அவர் அவளிடம், "நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?" என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.

'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற தன் நூலில், இந்நிகழ்வைக் குறித்து சிந்திக்கும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், யோபின் மனைவியும், சாத்தானும், தங்கள் எண்ண ஓட்டங்களில் ஒருமித்திருந்ததைப் பற்றி குறிப்பிடுகிறார்.

மனிதர்கள், துன்பங்களைச் சந்திக்கும்போது, கடவுளைப் பழித்து, சாபமிடுவர் என்பது, சாத்தானின் கணிப்பு. தன் கணிப்பு சரியானது என்பதை, கடவுளுக்குக் காட்டவே, சாத்தான், யோபின் உடைமைகள் மீதும், உடல் மீதும் துன்பங்களைச் சுமத்துகிறான். இத்தனை துன்பங்களுக்குப் பிறகும், யோபு இறைவனைப் பழிக்காமல் இருப்பது, சாத்தானைத் தோல்வியுறச் செய்கிறது. தன் தோல்வியை, எரிச்சலை, யோபின் மனைவி வழியே சாத்தான் வெளிப்படுத்துகிறான்: "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" (யோபு 2:9) என்று யோபின் மனைவி கூறும் சொற்கள், உண்மையிலேயே சாத்தான் கூற விழைந்த சொற்கள் என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் கூறுகிறார்.

சொத்து, சுகம், சுற்றம் ஆகியவை, நம்மைச் சூழ்ந்திருக்கும்போது, வாழ்க்கை சுமுகமாகச் செல்லும்போது, பொதுவாக, நம்மைப் பற்றியோ, அடுத்தவரைப் பற்றியோ, இறைவனைப் பற்றியோ, நாம் ஆழமாகச் சிந்திப்பது கிடையாது. ஆனால், நம் வாழ்வில் இழப்புக்கள் நேரும்போது, நமக்குள் எழும் கேள்விகள், மிக ஆழமாக நம்மை ஊடுருவிச் சென்று, நம்மைப் பற்றியும், நம்மைச் சார்ந்தோரைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் தேடல்களை மேற்கொள்ள, நம்மைத் தூண்டுகின்றன.

அனைத்தையும் இழக்கும்போது, அல்லது, அனைத்தையும் துறப்பதற்கு நாம் தயாராகும்போது, நமது தேடல் பயணம், பயனுள்ளதாக அமையும் என்பதைக் கூறும் ஒரு சிறுகதை இது. ஆன்மீக எண்ணங்களை, தன் உரைகள் வழியாகவும், நூல்களாகவும் வழங்கிவரும் T.T.ரங்கராஜன் அவர்கள், 'தாயம்' என்ற நூலில் இந்தச் சிறுகதையைக் கூறியுள்ளார்:

"குருவே, தயவு செய்து என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒருவர் கூறினார். "நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு கேட்டார். "ராமச்சந்திர ராவ்" என்று அவர் பதிலளித்தார். "அது உன் பெயர். அதை உதறிவிட்டு நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு மீண்டும் கேட்டார். "நான் ஒரு தொழிலதிபர்," என்று அவர் கூறினார். "அது உன் தொழில். அதை விட்டுவிட்டு, நீ யார் என்பதைக் கூறு."

"நான் ஓர் ஆண்." "அது உன் பாலினம். அதை அகற்றிவிட்டு நீ யார் என்பதைக் கூறு."

"குருவே, இப்போது நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லை!"

"மிகவும் நல்லது, இதுதான் தேடுபவனுக்கான துவக்கப் பள்ளி. உன் முத்திரைகள் அனைத்தையும் களைந்துவிட்டு, நீ நீயாக மட்டும் வருகிறாய் அல்லவா, அதுதான் தேடுபவனின் துவக்கப்பள்ளி. உன் பெயர் அச்சிடப்பட்ட அட்டை, பூசாரிகளிடம் வேலை செய்யும். ஆனால், கடவுளிடம் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது," என்று குரு வலியுறுத்தினார்.

நிறுவனங்களில் பணிபுரிவோர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர், ஒருவர் ஒருவரைச் சந்திக்கும்போது, தாங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்த, 'விசிடிங் கார்ட்' அல்லது, 'பிசினஸ் கார்ட்' என்று சொல்லப்படும் அடையாள அட்டைகளைப் பரிமாறிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். தங்கள் பெயர், வாங்கியப் பட்டங்கள், வகிக்கும் பதவிகள் என்ற பல அடையாளங்கள், அந்த அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும். அந்த அட்டைகள் எவ்வளவுக்கெவ்வளவு நிரப்பப்பட்டுள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் முக்கியமானவர்கள் என்பது பொதுவான கணிப்பு.

நமது பிறப்பின் வழியே நம்மை வந்தடையும் ஒரே ஓர் அடையாளம், நாம் மனிதப்பிறவிகள் என்ற அடையாளம் மட்டுமே. ஆனால், வளர, வளர, நாம் சேகரித்துக்கொள்ளும் ஏனைய அடையாளங்கள், பல நேரங்களில், நமது அடிப்படை அடையாளமான 'மனிதப்பிறவி' என்ற இயல்பை மறைத்துவிட, அல்லது, மறந்துவிட வழி வகுக்கின்றன. நாமாகவே சேர்த்துக்கொண்ட அடையாளங்கள், நம்மைவிட்டு விடைபெறும்போது, நமது அடிப்படை அடையாளமான 'மனிதப்பிறவி' என்ற இயல்பு வெளிப்படுகிறது.

உடைமைகள், உறவுகள், உடல் நலம் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் யோபு, தன்னைப் பற்றியும், தன் இறைவனை ப்பற்றியும் ஆழ்ந்ததொரு தேடலை மேற்கொள்கிறார். இத்தேடலில் அவருக்கு உதவி செய்வதற்காக வந்து சேர்ந்த யோபின் நண்பர்கள் மூவர், அவருக்கு உபத்திரமாக மாறுகின்றனர். யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே நிகழும் உரையாடல், 40 பிரிவுகளில் அடங்கியுள்ளது. இப்பிரிவுகளில் காணப்படும் ஒரு சில முத்தான இறை வாக்கியங்கள், நாம் யோபு நூலில் மேற்கொள்ளும் இறுதித் தேடலின் கருவாக அமையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.