2017-12-19 14:12:00

பாசமுள்ள பார்வையில்: "எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்"


தற்போது பங்களாதேஷ் என்றழைக்கப்படும் கிழக்குப் பாகிஸ்தானில், 1970ம் ஆண்டு, ஏற்பட்ட 'போலா' (Bhola) புயலில், 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு உதவிகள் செய்ய, பிரான்ஸ் நாட்டிலிருந்து மருத்துவர்கள் சென்றனர்.

1971ம் ஆண்டு, நைஜீரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவிகள் செய்ய விரைந்தனர், பிரெஞ்சு நாட்டு மருத்துவர்கள். இவ்விரு நாடுகளிலும் பணியாற்றிய மருத்துவர்கள் இணைந்து, 1971ம் ஆண்டு, டிசம்பர் 20ம் தேதி "எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்" என்ற அமைப்பினை உருவாக்கினர். அரசுசாரா இவ்வமைப்பில் பணியாற்றும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் அனைத்து உதவிகளையும், இலவசமாகச் செய்கின்றனர்.

மதம், மொழி, இனம், அரசியல் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டும் உதவிகள் செய்துவரும் இவ்வமைப்பினர், தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். போர்களால் காயமுற்றோர், இயற்கைப் பேரிடர்களாலும், தொற்று நோய்களாலும் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இவ்வமைப்பினர் முன்னுரிமை அளித்து உதவிகள் செய்கின்றனர்.

எந்த ஓர் அரசிடமிருந்தும், நிதி உதவிகள் பெறாமல் பணியாற்றி வருவதால், இவ்வமைப்பினர், அரசுகள் எடுக்கும் தவறான முடிவுகள், ஒரு சில இனத்தவருக்கு எதிராக விதிக்கும் அநீதியானத் தடைகள், ஆகியவற்றை மீறி, உதவிகள் செய்வதோடு, அந்த அரசுகளின் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொணரவும் தயங்குவதில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.