2017-12-18 16:10:00

வாரம் ஓர் அலசல் – இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்வோம்


டிச.18,2017. தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தை ஒன்றை, இருவாரங்களுக்குமுன் காப்பாற்றியிருக்கிறார். அந்தக் கோவிலின் அருகில் உள்ள கடையின் பின்புறத்தில் வெகுநேரமாக ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க, குழந்தையின் சத்தம் வந்த இடத்தைப் போய்ப் பார்த்திருக்கிறார் முதியவர். அங்கே, பிறந்து ஒரு நாள் ஆன ஓர் ஆண் குழந்தை, துணியில் சுத்தி குப்பைத் தொட்டியின் அருகில் போடப்பட்டு இருந்தது. குழந்தையைச் சுற்றி நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தைப் பார்த்ததும் பதறிப்போன  பிச்சைக்கார முதியவர், நாய்களை அங்கிருந்து விரட்டி அடித்து குழந்தையைத் தூக்கி வந்திருக்கிறார். பிச்சை எடுக்கும் முதியவரிடம் குழந்தையைப் பார்த்ததும், அக்கோயில் அருகில் கடைகள் வைத்திருக்கும் சிலர் 108 அவசர மருத்துவ வாகன சேவை மற்றும் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, அக்குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. பிச்சைக்கார முதியவரையும் பாராட்டியுள்ளனர் மக்கள். தோற்றத்தைக் கண்டு யாரையும் எளிதாக கணித்துவிட முடியாது.  

Muniba Mazari என்பவர், பாகிஸ்தான் நாட்டில் ஐ.நா.வின் நன்மனத்தூதராக பணியாற்றி வருகிறார். பாகிஸ்தான் நாட்டின் இரும்புப் பெண் மற்றும், உண்மை முகம் என இவர் அறியப்படுகிறார். பாகிஸ்தானில், பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக, ஐ.நா.வின் பாகிஸ்தான் பெண்கள் அமைப்பு, முதன்முறையாக தேசிய நன்மனத்தூதராக இவரை நியமித்துள்ளது. Mazari அவர்கள், சிறந்த ஓவியர், எழுத்தாளர், பாடகர், ஊக்கமூட்டும் மேடைப் பேச்சாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். எப்போதும் சக்கர நாற்காலியில் இருக்கும் Mazari அவர்கள், மேடையை நாற்காலியில் தனது வாழ்வு பற்றி, ஒரு கூட்டத்தில் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

‘அவர்கள் எனது மாற்றுத்திறனைப் பார்க்கிறார்கள். ஆனால் நானோ எனது திறனைப் பார்க்கிறேன். அவர்கள் என்னை மாற்றுத்திறனாளி என அழைக்கின்றானர். ஆனால் நான் என்னை வித்தியாசமாகத் திறமையுள்ளவள் என அழைக்கிறேன். சில நிகழ்வுகள் உன் வாழ்வில் நடக்கலாம். அந்த நிகழ்வுகள் உன்னைச் சிதறடிக்கும், உருவிழக்கச் செய்யும், ஆயினும் அவை உன்னைச் செதுக்கி உருவாக்கி, உன்னிலுள்ள மிகச் சிறந்தவற்றை வெளிப்படுத்தும். இதுதான் என் வாழ்விலும் நடந்தது. எனக்கு 18 வயது நடந்தபோது திருமணம் செய்து வைக்கப்பட்டேன். எனது திருமணம் உங்களுக்கு மகிழ்வைத் தரும் என்றால், அதற்குச் சம்மதிக்கிறேன் என்று, என் தந்தையிடம் சொன்னேன். ஆனால் அது ஒருபோதும் மகிழ்வான திருமணமாக இல்லை. எனக்குத் திருமணமாகி இரு ஆண்டுகள் சென்று, எனது கணவரும் நானும் காரில் சென்றோம். காரை ஓட்டிய எனது கணவர் தூங்கிவிட்டார். இதனால் கார் பள்ளத்தில் விழுந்தது. எனது கணவர் எப்படியோ காரைவிட்டு குதித்து உயிர் பிழைத்தார். இது குறித்து நான் மகிழ்கிறேன். ஆனால் நானோ காருக்குள்ளிலிருந்து வெளியே வர முடியவில்லை. படுகாயமுற்றேன். மணிக்கட்டு, தோள்பட்டை எலும்பு, கழுத்து எலும்பு, இடுப்பு எலும்பு ஆகியவை முறிந்தன. இதனால் நுரையீரலும், கல்லீரலும் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டன. என்னால் மூச்சுவிட முடியவில்லை. சிறுநீர் கழிக்கும் செயலை இழந்தேன். அதனால்தான் இப்போது, நான் எங்கு சென்றாலும் எல்லா நேரமும் இந்தப் பையுடன் செல்கிறேன். எனது முதுகில் மூன்று எலும்புகள் முழுவதுமாக நசுங்கிவிட்டன. அதனால் நான் வாழ்வு முழுவதும் வாத நோயால் தாக்கப்பட்டேன். கடைசியில் மருத்துவமனையில் இரண்டரை மாதங்கள் இருந்தேன். பல முறைகள் அறுவை சிகிச்சைகள் நடந்தன. ஒருநாள் மருத்துவர் என்னிடம் வந்து, நீ ஓவியக் கலைஞராக ஆசைப்பட்டாய் என அறிந்தேன். உன்னால் மீண்டும் ஓவியம் வரைந்து வர்ணம் தீட்ட இயலாது. உனது மணிக்கட்டும், தோளும் பழுதடைந்திருப்பதால், ஓவியம் வரைய கருவிகளைப் பிடிக்க இயலாது. உனது முதுகுத் தண்டுவடம் எவ்வளவு மோசமாக இருக்கின்றதென்றால் உன்னால் நடக்க முடியாது. உனது தண்டுவடம் பாதிக்கப்பட்டிருப்பதால் உன்னால் குழந்தை பெற முடியாது என்று சொன்னார். அந்த நாளில் நான் மிகவும் மனம் உடைந்து போனேன். எனக்கு இந்நிலை ஏன் என்று அம்மாவிடம் அழுதேன். இதுவும் கடந்துபோம். கடவுள் உனக்கென்று பெரிய திட்டம் வைத்திருக்கிறார் அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் ஒரு திட்டம் உள்ளது என்று என் அம்மா சொன்னார்கள். வார்த்தைகளுக்கு ஆன்மாவைக் குணமாக்கும் சக்தி உண்டு என்று, அப்போது எனக்கு ஒரு தூண்டுதல் கிடைத்தது. அன்று எனது வாழ்வு பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். இத்தகைய அனைத்து துன்பங்கள் மற்றும் வேதனைகளுக்கு மத்தியில், என் அம்மா சொன்ன அந்த அற்புத வார்த்தைகள் என்னைத் தொடர்ந்து பயணிக்க வைத்தன. ஒரு நாள் என் சகோதரர்களிடம், எனக்கு இந்த மருத்துவமனையில் வெள்ளைச் சுவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது சோர்வாக உள்ளது. என் வாழ்வுக்கு பலவண்ண வர்ணம் தீட்ட விரும்புகிறேன். சில வர்ணங்களைக் கொண்டு வாருங்கள் என்றேன். எனது மரணப்படுக்கையில் என்ற, அந்த வர்ண ஓவியத்தை வரைந்தேன். இது எனக்குக் குணமளிக்கும் மருந்தாக இருந்தது. பின் வீட்டிற்குச் சென்றேன். எனது முதுகிலும், இடுப்பிலும் புண்கள் வந்துவிட்டதால் என்னால் உட்கார முடியவில்லை. ஒவ்வாமைகளாலும் பாதிக்கப்பட்டேன். அதனால் படுக்கையில் இரு ஆண்டுகள் இருக்க வேண்டிய கட்டாயம். படுத்துக்கொண்டே இயற்கையைப் பார்த்து இரசித்தேன், பறவைகள் பாடுவதைக் கேட்டேன். அந்நேரத்தில், நான் என் அச்சம், பயங்கள் எல்லாவற்றையும் எதிர்த்துப் போராட தீர்மானித்தேன். மனிதர்களை இழக்கும் பயம், தெரியாதவர்கள் பற்றி பயம், உடல் சுகத்தை, செல்வத்தை இழக்கும் பயம் போன்ற எல்லாப் பயங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக எழுதினேன். அனைத்தையும் ஒவ்வொன்றாக வெற்றிகாணத் தீர்மானித்தேன். திருமண முறிவு பற்றிச் செய்தி வந்தபோது கலங்கினேன். ஆயினும் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். இது எனது பயம் என்று அறிந்து அதை ஏற்றேன். எனது கணவர் மறுதிருமணம் செய்வதை அறிந்து அவருக்கு வாழ்த்துச் செய்தி எழுதி அனுப்பினேன். நான் அவருக்காகச் செபிக்கின்றேன் என்பதை அவர் அறிவார். அடுத்து, நான் தாயாக முடியாது என்ற பயம். இந்த உலகத்தில் எத்தனையோ குழந்தைகள் கைவிடப்பட்டு உள்ளனர். அவர்களை ஏற்பதற்கு ஆள்கள் தேவை என்று உணர்ந்தேன். எனவே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து அந்தப் பயத்தையும் போக்கினேன். பின் பொது மேடைகளில் பேசத் தொடங்கினேன். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகச் சேர்ந்தேன். இப்போது ஐ.நா. சார்பாக பெண்களின் உரிமைகளுக்காக, பாலியல் சமத்துவத்திற்காகப் பேசி வருகிறேன். நான் பொது நிகழ்வுகளில் எப்போதும் புன்னகையோடு காணப்படுகிறேன். எப்போதும் இவ்வாறு இருப்பது சோர்வாக இல்லையா? என மக்கள் கேட்கின்றனர். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் இழந்த அனைத்தையும் குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். எனவே வாழ்வை முழுமையாக வாழுங்கள். உங்களிடம் நீங்கள் அன்பாக இருங்கள். நீங்கள் இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.  உங்களிடம் நீங்கள் அன்பாக இருங்கள். அப்போதுதான் நீங்கள் மற்றவரிடம் அன்பாக இருக்க முடியும். உங்களை அன்புகூருங்கள். வாழ்வு கடினமாக இருக்கும். துன்பங்கள் இருக்கும். களைப்பாக இருக்கும். அவையே உங்களை வலிமையுள்ள மனிதர்களாக மாற்றும். ஆதலால் நீங்கள் இருக்கும் நிலையில் உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு ஏற்கும்போது உலகம் உங்களை ஏற்றுக்கொள்ளும். அனைத்தும் உங்களிலிருந்தே தொடங்குகின்றது. உங்களை நீங்களே அன்புகூருங்கள். அந்த அன்பைப் பரப்புங்கள்...’

Mazari அவர்களை, பிபிசி ஊடகம், 2015ம் ஆண்டில், நூறு சிறந்த பெண்களில் ஒருவராக அறிவித்தது. இப்பெண் போன்ற எத்தனையோ பேர் வாழ்வில் நம்பிக்கையூட்டும் செய்திகளை வழங்கி, வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து ஊக்குவித்து வருகின்றனர். துன்பங்கள் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும் என்கின்றனர். அன்பர்களே, 2017ம் ஆண்டு நிறைவுற நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வாழ்வின் கணக்குகளைச் சரிபார்த்து, அனைத்திற்கும் கடவுளுக்கு நன்றி சொல்லும் நாள்கள் இவை. வாழ்வில் சோதனைகள் நம்மைச் சிறந்தவர்களாக அல்லது அதற்கு எதிர்மாறாகவும் மாற்றலாம். எல்லாமே நம் கையில்தான் உள்ளது. அழகான பொருள்கள் எப்போதும் நல்லவைகளாக இருக்காது. ஆனால், நல்ல பொருள்கள் எப்போதும் அழகாக இருக்கும். அப்துல்கலாம் அவர்கள் சொன்னார் - கடந்த காலம் ஒரு வீணான தாள். நிகழ்காலம் ஒரு தினத்தாள். வருங்காலம் ஒரு கேள்வித் தாள். எனவே வாழ்வைக் கவனமாக வாசித்து எழுத வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், வாழ்வு கரைந்துபோகும் தாளாகி விடும் என்று.    

இயேசுவின் பிறப்பைக் கொண்டாட தயாரிப்புகள் நடந்துவருகின்றன. இவ்வேளையில், நம் வாழ்வை அன்பு இறைவன் கையில் அர்ப்பணிப்போம். நமக்கு என்றும் நல்லதையே விரும்பும் இறைவன், நன்மையையே செய்வார் என்று நம்புவோம். இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்வோம். அப்போதுதான் அடுத்தவரையும் அவரது நிலையிலே ஏற்க இயலும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.