2017-12-18 16:31:00

மகிழ்வில் தாத்தா பாட்டிகளுடனும் இறைவனுடனும் உரையாடல்


டிச.18,2017. குழந்தைகளுக்கும், கர்ப்பம் தாங்கிய தாய்மார்களுக்கும் உதவும் நோக்கத்தில் வத்திக்கானிலிருந்து இயங்கும் சாந்தா மார்த்தா நல மையத்தினால் பயன்பெறும் சிறார்களை, இஞ்ஞாயிறு காலை வத்திக்கானில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், இச்சிறாரையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'குழந்தைகளின் மகிழ்வு என்பது, உன்னத புதையல் என்பதால், அவர்கள் மகிழ்வாக இருப்பதை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகிறது' என அழைப்பு விடுத்தார்.

குடும்பத்தில் உள்ள பிரச்னைகள், மற்றும் பெற்றோரிடையே உருவாகும் தகராறுகள் வழியாக, குழந்தைகளின் சோகத்திற்கு காரணாமாகாதீர்கள் என பெற்றோருக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தங்கள் தாத்தா பாட்டிகளுடன் உரையாடல் நடத்த குழந்தைகளுக்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்குமாறும் விண்ணப்பித்தார்.

வரலாற்றை உருவாக்கியுள்ள நல்லவைகளையும், விசுவாசத்தையும், மதிப்பீடுகளின் நினைவுகளையும், தாத்தா பாட்டிகளிடமிருந்தே நாம் கற்றுக்கோள்கிறோம், ஏனெனில் அவர்கள் நம்மை அன்புகூர்ந்து அதன் வழியாகக் கற்றுத்தருகிறார்கள் என மேலும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தாத்தா பாட்டிகளுடன் உரையாட கற்றுக்கொள்வதுபோல், இறைவனுடனும் உரையாட கற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, மகிழ்வாயிருத்தல், தாத்தா பாட்டிகளுடன் உரையாடல், இறைவனுக்கு இதயத்தைத் திறந்து அவருடன் பேசுதல் போன்றவை, குழந்தைகளின் வாழ்வில் முக்கியத்துவம் நிறைந்தவை என்பதை எடுத்துரைத்தார்.

வத்திக்கானிலிருந்து இயங்கும் சாந்தா மார்த்தா நல மையத்தினால் பயன்பெறும் சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.