2017-12-18 16:03:00

பாசமுள்ள பார்வையில்.. உண்மையான பக்தர்


கடவுள் பக்தர் ஒருவர், தன்னைப் போன்ற அடியவர் வேறு யாரும் இருக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டார். ஒருநாள் கடவுள் இந்த பக்தரை அழைத்து, அந்த ஆற்றங்கரையில் என் அடியவர்கள் இருக்கின்றனர். நீ அவர்களைச் சந்தித்தால் உனக்கு நன்மை உண்டு என்று சொன்னார். அந்த பக்தரும் அந்த ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே முதலில், மண்சட்டி சுமக்கும் ஒரு பெண்ணைக் கண்டார். அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று நடப்பவற்றைக் கவனித்தார் அவர். அப்பெண், காலையில் எழுந்தவுடன், கடவுளே என்றார். பின் வேலைக்குச் சென்று, பகலெல்லாம் உழைத்து களைத்து மாலையில் வீடு திரும்பினார். அவர் படுக்கையில் அமர்ந்துகொண்டு கடவுளே என்று சொன்னார். ஒரு நாளைக்கு இருமுறை கடவுளை நினைப்பவர் சிறந்த அடியவரோ என்ற சந்தேகம் எழுந்தது பக்தருக்கு. கடவுளிடம் இது பற்றிச் சொன்னார் பக்தர். உடனே கடவுள் அவரிடம், பால் நிறைந்த கிண்ணத்தை எடுத்துக்கொண்டு இந்த நகரத்தைச் சுற்றி வா. ஒரு துளி பால்கூட கீழே சிந்தக் கூடாது என்று சொன்னார். பக்தரும் கடவுள் சொன்னபடி செய்தார். மாலையில் கடவுள், பக்தரிடம், இன்று நீ நகரத்தைச் சுற்றி வந்தபோது எத்தனைமுறை என்னை நினைத்தாய் என்று கேட்டார். ஐயனே, நான் ஒருமுறைகூட உம்மை நினைக்கவில்லை. பால் சிந்தக் கூடாது என்ற தங்களின் கட்டளையில் கவனமாக இருந்தேன் என்றார். உடனே கடவுள், ஒரு கிண்ணம் பாலையே நினைத்து என்னை மறந்தாய். இந்த அடியவளோ, குடும்பச் சுமையைத் தாங்கிக்கொண்டு ஒரு நாளில் இருமுறை என்னை நினைக்கின்றாரே என்று, தனது உண்மையான அடியான் யார் என்பதை உணர்த்தினார் கடவுள்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.