2017-12-15 14:52:00

கர்தினால் Arborelius, 2017ம் ஆண்டின் சுவீடன் மனிதர்


டிச.15,2017. சுவீடன் நாட்டு கர்தினால் Anders Arborelius அவர்கள், 2017ம் ஆண்டின் சுவீடன் மனிதர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கர்தினால் Arborelius அவர்களை, இவ்வாண்டின் சுவீடன் மனிதர் என்று தேர்ந்தெடுத்துள்ளது குறித்து அறிவித்த, சுவீடன் நாட்டின் முக்கிய, Fokus வார இதழ், கர்தினால் Arborelius அவர்கள், நாட்டின் பொதுநலனில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார் என்று பாராட்டியுள்ளது.

16ம் நூற்றாண்டிலிருந்து எந்த ஒரு சுவீடன் நாட்டவரும், கர்தினாலாக உயர்த்தப்படாமல் இருந்தவேளை, 2017ம் ஆண்டு, ஜூன் 29ம் தேதி, ஸ்டாக்கோல்ம் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரான Anders Arborelius அவர்கள், கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ளார் என்றும், Fokus இதழ் கூறியுள்ளது.

2017ம் ஆண்டின் சுவீடன் மனிதர், ஏற்கனவே வரலாறு படைத்துள்ளார் என்றும், 1998ம் ஆண்டில், ஸ்டாக்கோல்ம் ஆயராகப் பொறுப்பேற்றது முதல், சுவீடன் நாட்டின் பொது விவகாரங்கள் குறித்த கலந்துரையாடல்களில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார் என்றும், அந்த இதழ் மேலும் கூறியுள்ளது. 

லூத்தரன் கிறிஸ்தவ சபையினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சுவீடன் நாட்டில், கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதற்கு, அச்சமில்லாத எண்ணம் அவசியம் என்றும், சுவீடன் நாட்டு மக்களையும், அந்நாட்டில் குடியேறியுள்ள ஏனைய நாட்டினரையும் ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றும், Fokus இதழ் பாராட்டியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.