2017-12-14 15:51:00

மின்னணு கழிவுப்பொருள்களால் உடல் நலத்திற்கு பெரும் ஆபத்து


டிச.14,2017. செல்லிடப்பேசிகள், கணணிகள், தொலைக்காட்சி பெட்டிகள், குளிர் சாதன பெட்டிகள் என்று, பலவகை மின்னணு கழிவுப்பொருள்கள், மனித உடல் நலத்திற்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் அளவு அதிகரித்துள்ளன என்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

ஐ.நா. அவை, இப்புதனன்று வெளியிட்ட The Global E-Waste Monitor 2017 என்ற அறிக்கையில், மின்னணு கழிவுகள் சுற்றுச்சூழலை எவ்வளவு தூரம் பாதித்துள்ளன என்பது கூறப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு 4 கோடியே 47 இலட்சம் மெட்ரிக் டன் மின்னணு கழிவுகள் உலகில் உருவாக்கப்பட்டன என்றும், இது, 2014ம் ஆண்டைக் காட்டிலும் 8 விழுக்காடு அதிகம் என்றும் எச்சரித்துள்ள இவ்வறிக்கை, இதே நிலை தொடர்ந்தால், 2021ம் ஆண்டு, இக்கழிவுகள் 17 விழுக்காடு அளவு அதிகமாகும் என்று கூறியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் உருவாகும் மின்னணு கழிவுப்பொருள்கள், 5500 கோடி டாலர்கள் மதிப்புள்ளவை என்றும், இவற்றில், 20 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்றும் இவ்வறிக்கை கூறியுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.