2017-12-14 16:03:00

நிலத்தடி எண்ணெய் எடுக்க உலக வங்கி நிதி உதவிகள் செய்யாது


டிச.14,2017. நிலத்தடியில் உள்ள எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் கண்டுபிடித்தல், தோண்டி எடுத்தல் ஆகிய முயற்சிகளுக்கு, உலக வங்கி, 2019ம் ஆண்டு முதல், நிதி உதவிகள் செய்யாது என்று, உலக வங்கியின் தலைவர், ஜிம் யாங் கிம் அவர்கள், ஒரே உலகக் கோளம் உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி பாரிஸ் மாநகரில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, டிசம்பர் 12 முதல் பாரிஸ் மாநகரில் நடைபெறும் ஒரே பூமிக்கோளம் உச்சி மாநாட்டில், உலகவங்கியின் தலைவர், ஜிம் யாங் கிம் அவர்கள், தன் நிறுவனத்தின் முடிவை அறிவித்தார்.

இந்த உச்சி  மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் அவர்கள், உலகில் தற்போது ஏற்படும் வெள்ளங்கள், புயல்கள், கடல் அலைகளின் அதிகரித்த அளவு, வறட்சி அனைத்திற்கும், வெப்பமயமாதல் ஒரு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

இயற்கைப் பேரிடர்கள் அனைத்திலும், அதிகம் பாதிக்கப்படுவது, மூன்றாம் உலக நாடுகளே என்பதும், 2020ம் ஆண்டுக்குள் வறிய நாடுகளுக்கு உதவிகள் செய்வதாக செல்வம் மிக்க நாடுகள் வாக்களித்திருந்த 100 பில்லியன் டாலர்கள் நிதி உதவி, இன்னும் திரட்டப்படவில்லை என்பதும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதென்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.