2017-12-14 15:42:00

திருத்தந்தை: சந்திக்கும் கலாச்சாரத்தை உறுதி செய்வது தேவை


டிச.14,2017. பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு கலாச்சாரங்களிலிருந்தும் ஒன்று கூடியிருக்கும் பன்னாட்டுத் தூதர்கள் குழு, நம்மிடையே உள்ள பன்முகத்தன்மை, இவ்வுலகைக் கட்டியெழுப்பும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஏமன், நியூசிலாந்து, சுவாசிலாந்து, அசர்பைஜான், சாட், லீக்டன்ஸ்டெயின் மற்றும் இந்தியா ஆகிய ஏழு நாடுகளின் சார்பாக, திருப்பீடத்திற்குத் தூதர்களாகப் பணியாற்றுவோரை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கும், அவர்கள் நாட்டு மக்களுக்கும் திருப்பீடத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பன்முகத்தன்மையை அழிக்க விரும்பும் வன்முறையான அடிப்படைவாத கருத்தியல்களாலும், சுயநல சிந்தனைகளாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் மனித சமுதாயப் பாதுகாப்பு இரண்டும், ஆபத்தைச் சந்திக்கின்றன என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உரையாடல், மற்றும், சந்திக்கும் கலாச்சாரத்தினை உறுதி செய்வதால், ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்பமுடியும் என்ற கலையை ஒவ்வொரு தலைமுறையினரும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, நாம் கற்றுக்கொண்டதை இளையோர் மற்றும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது நமது கடமை என்றும் எடுத்துரைத்தார்.

தங்கள் நாட்டின் சார்பாக, திருப்பீடத்தில் தூதர்களாகப் பணியாற்ற வந்திருப்போருக்கு, திருப்பீடத்தின் முழுமையான ஆதரவு உண்டு என்ற வாக்குறுதியோடு, திருத்தந்தை, புதிய தூதர்களுக்கு வழங்கிய உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.