2017-12-14 16:17:00

எருசலேம் நகரம் மீண்டும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது


டிச.14,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, டெல் அவிவ் நகரிலிருந்து, எருசலேமுக்கு தன் தூதரகத்தை மாற்றும் அந்த முடிவு, பாலஸ்தீனியர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் மற்றும் அரேபியர் ஆகியோருக்கு, முகத்தில் விழுந்த அறையாக உள்ளது என்று, மாறனைட் முதுபெரும் தந்தை, கர்தினால் Béchara Boutros Raï அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவினால், இதுவரை ஓரளவு அமைதியில் வாழ்ந்த எருசலேம் நகரம் மீண்டும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது என்று கர்தினால் Boutros Raï அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், கர்தினால் Boutros Raï அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில், லெபனான் நாட்டில் Bkerkè என்ற ஊரில் அமைந்துள்ள மாறனைட் இலத்தீன் வழிபாட்டு முறை தலைமையகத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் இவ்வியாழனன்று கூடி வந்துள்ளனர் என்று பீதேஸ் செய்தியொன்று கூறுகிறது.

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், உலக சமுதாயத்தின் எண்ணங்களுக்குச் சிறிதும் மதிப்பு தராமல், ஒருதலையாய் எடுத்துள்ள முடிவு, மோதல்களைத் தூண்டுவதாக அமைந்துள்ளது என்று, லெபனான் நாட்டில் பணியாற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, Yohanna Yazigi அவர்களும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், இஸ்ரேல் நாட்டின் தலைநகராக எருசலேம் நகரை மாற்ற மேற்கொண்டுவரும் முயற்சிகளை எதிர்த்து, ஜோர்டான் நாட்டிலுள்ள கிறிஸ்தவ, மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள், டிசம்பர் 13, இப்புதனன்று, அம்மான் நகரில், அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர் என்று. பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.