2017-12-13 16:09:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: இறைவனில் மகிழும் நாள் ஞாயிறு


டிச.,13,2017. ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் துவங்கிவிட்டதால், கடந்த வாரம் போன்றே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை சந்திப்பு, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. திருநற்கருணை மற்றும் திருப்பலி குறித்த புதிய மறைக்கல்வித்தொடர் ஒன்றைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, ஞாயிறு திருப்பலியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். உயிர்த்த இயேசு, வாரத்தின் முதல் நாளில் மரிய மதலேனாவுக்கு தோன்றியது, மற்றும்,  வாரத்தின் முதல் நாளன்று மாலையில், சீடர்களுக்கும் தோன்றி, அவர்களுக்கு அமைதியை அறிவித்து, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கியது பற்றிய புனித யோவான் நற்செய்தி பிரிவு 20 வாசிக்கப்பட, திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு தொடர்ந்தது.

அன்பு சகோதர சகோதரிகளே, நற்கருணை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, ஞாயிறு திருப்பலிகளின் முக்கியத்துவம் குறித்து நோக்குவோம். கிறிஸ்தவர்களாகிய நாம்,  இயேசுவை சந்திக்கவும், அவர் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவும், அவருடைய விருந்தில் பங்கு கொள்ளவும், திருஅவை எனும் மறையுடலின் அங்கத்தினர்கள் என்ற வகையில், நம் இவ்வுலகப் பணிகளை, இறை அருளின் துணைகொண்டு நிறைவேற்றவும், திருநற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கு பெறுகிறோம். இயேசுவின் உயிர்ப்பு நாளும், தூய ஆவியானவர் பொழிந்த பெந்தக்கோஸ்தே நாளும், வாரத்தின் முதல் நாட்க‌ளாக, அதாவது ஞாயிறு தினங்களாக இருந்தன. கடவுளை சந்திக்காமல் இந்த நாளை நாம் எப்படி செலவிட முடியும்? மதச்சார்பற்று வாழும் இன்றைய உலகில், ஞாயிறு குறித்த முக்கியத்துவம் இழக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. இறைவனின் நாளை நாமனைவரும் மகிழ்ச்சியின் நாளாகவும், கடின வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கும் நாளாகவும் சிறப்பிக்க வேண்டும் என இரண்டாம் வத்திக்கான் சங்கம் நமக்கு அழைப்பு விடுத்தது. ஏனெனில், இறைவனின் குழந்தைகளாகிய நம் மாண்பின் அடையாளமாக அது இருக்க வேண்டும் என்பதற்காக. எந்த முடிவற்ற பேரின்பத்திற்கும், இளைப்பாறலுக்கும் நாம் அழைக்கப்பட்டுள்ளோமோ, அவைகளையே இப்போதும் நாம் திருநற்கருனையில் அனுபவிக்கிறோம். அந்த பேரின்பம், மற்றும், இளைப்பாறல் நிலைகளின் முன்சுவையாக ஞாயிறு உள்ளது. நாம் திருப்பலிக்குச் செல்வது, இறைவனுக்கு எதையும் கொடுப்பதற்காக அல்ல, மாறாக, அவரிடமிருந்து அருளையும் பலத்தையும் பெறுவதற்காக. இந்த அருளும் பலமுமே, நாம் அவரின் வார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கவும், அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், நம்முள் இருக்கும் அவரின் இருப்பின் வழியாக, அவரின் அன்பு மற்றும் நன்மைத்தனத்தின் சாட்சிகளாக இவ்வுலகின் முன்  விளங்கவும் நமக்கு உதவுகிறது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க மதிப்பீடுகளால் தூண்டப்பட்டு உருவான அரசு-சாரா அமைப்புக்களின் கூட்டம் உரோம் நகரில் இடம்பெறுவதையும் குறிப்பிட்டு, மனிதகுல ஒன்றிணைந்த வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், இந்நாளின் மறைக்கல்வி உரைக்கு செவிமடுக்க, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.