2017-12-12 16:33:00

குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலி


டிச.12,2017. டிசம்பர் 12, இச்செவ்வாய் மாலை ஆறு மணிக்கு குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலியை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாஸ்டன் கர்தினால் ஜான் பாட்ரிக் ஒ’மாலே, ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் மாற்கு கெல்லெட் உட்பட, திருஅவையின் மூத்த அதிகாரிகள், திருத்தந்தையுடன் சேர்ந்து, இத்திருப்பலியை நிறைவேற்றுகின்றனர்.

மெக்சிக்கோ நாட்டின் குவாதலூப்பே நகரில் வாழ்ந்த புனித யுவான் தியெகோ அவர்களுக்கு, கி.பி.1531ம் ஆண்டு, டிசம்பர் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை, அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது அன்னை மரியா, "வாழ்வளிக்கும் உண்மையான கடவுளின் தாய் நான். என்னைத் தேடிவரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்" என்று கூறினார். அன்னை தனது காட்சிக்கு ஆதாரமாக, யுவான் தியெகோ அவர்களின் மேலாடையில், தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் ஓர் அழகிய ஆலயம் எழுப்பப்பட்டு, இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. குவாதலூப்பே அன்னை மரியா, அமெரிக்காவின் பாதுகாவலர் ஆவார்.

மேலும், இத்திங்களன்று திருப்பீடத்தில் துவங்கியுள்ள, திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C9 கர்தினால்கள் அவையின் 22வது கூட்டத்தில், இச்செவ்வாயன்றும் கலந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் சீரமைப்பில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும், இக்கர்தினால்கள் அவையின் 22வது கூட்டம், இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.