2017-12-12 16:28:00

அருள்பணி உழுன்னலிலுக்கு, 2017ம் ஆண்டின் அன்னை தெரேசா விருது


டிச.12,2017. ஏமன் நாட்டின் ஏடனில், 2016ம் ஆண்டில் இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, ஓமன் நாட்டின் சுல்தான் அவர்களின் தலையீட்டால், பதினெட்டு மாதங்களுக்குப்பின் விடுதலை செய்யப்பட்ட சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்களுக்கு, 2017ம் ஆண்டின் அன்னை தெரேசா விருது மும்பையில் வழங்கப்பட்டுள்ளது.

அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள், ஏடனில், பெரும் ஆபத்துக்கள் நிறைந்த பகுதியில், மனித சமுதாயத்திற்கு கருணைப்பணியாற்றுவதற்கென, தன்னை முழுமையாய் அர்ப்பணித்திருந்தார் என்பதற்காக, இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்று, ஆசியச் செய்தி கூறியுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் பேசிய அருள்பணி உழுன்னலில் அவர்கள், தனது விடுதலைக்காகச் செபித்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

பயங்கரவாதிகள், சமூகத்தால் உருவாக்கப்படுகின்றனர் என்றும், சமூகங்கள் மன்னிக்கும் பண்பைக் கொண்டிருந்தால், அமைதி நிலவும் என்றும் கூறிய அருள்பணி உழுன்னலில் அவர்கள், செபங்களும், மன்னிப்பும், போர்களுக்கு அல்ல, மாறாக, அமைதிக்கு இட்டுச் செல்லும் என்று தெரிவித்தார்.

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ஏமன் நாட்டின் புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதியோர் இல்லத்திலிருந்து கடத்தப்பட்ட சலேசிய சபை அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள், 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓமன் நாட்டில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆதாரம் : AsiaNews/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.