2017-12-12 16:13:00

@Pontifex டுவிட்டர் செயலிக்கு வயது ஐந்து


டிச.12,2017. @Pontifex என்ற திருத்தந்தையின் டுவிட்டர் செயலி ஆரம்பிக்கப்பட்டு, டிசம்பர் 12, இச்செவ்வாயன்று ஐந்தாண்டுகள் நிறைவுறும்வேளை, அந்தச் செயலியைப் பார்வையிடுகின்றவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, “இன்று ஐந்தாண்டுகள் நிறைவைக் காணும் @Pontifex என்ற டுவிட்டர் செயலியைப் பார்வையிடுகின்றவர்களுக்கு நன்றி. சமூகத் தொடர்பு சாதனங்கள், மனிதாபிமானம் செறிந்த இடங்களாக, எப்பொழுதும் அமைவதாக!” என்ற சொற்களை வெளியிட்டுள்ளார்.

சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாக, நற்செய்தி அறிவிப்புப்பணியை ஆற்றுவதற்கென, 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், @Pontifex என்ற முகவரியில், தனது முதல் டுவிட்டரை வெளியிட்டார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இதே முகவரியில், ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் செய்தி வெளியிட்டு வருகிறார்.

நான்கு கோடிக்கும் மேற்பட்டோர், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தையும், ஐம்பது இலட்சத்துக்கு அதிகமானோர் இன்ஸ்டகிராம் செயலியையும் பார்வையிடுகின்றார்கள் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.