2017-12-11 14:57:00

பாசமுள்ள பார்வையில்.. அம்மா என்ற அமுதம்


அந்த வீட்டில், பிரசவ வலியில் கதறிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். உறவினர்கள் கவலையுடன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்நேரத்தில் வயிற்றிலிருந்த குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறாக, ஏதேதோ சத்தம் கேட்டது. குழந்தையின் மனதில், பயம் கலந்த ஒருவித குழப்பம் ஊசலாடியது. வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டுவிடலாம் என்று, குழந்தை அவரை அழைத்தது. இறைவா! வழக்கத்துக்கு மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே! எனக்குப் பயமாக இருக்கின்றது என, குழந்தை கேட்க, குழந்தாய், இனி நீ மனிதர்களுடன் வாழப் போகிறாய் என்றார் கடவுள். நான் இங்கு மகிழ்வாகத்தானே இருக்கிறேன், நான் ஏன் அங்கு போக வேண்டும், என்னை நீ இங்கு பார்த்துக்கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்? என குழந்தை கேட்க, கவலைப்படாதே குழந்தாய், அங்கு உன்னைப் பார்த்துக்கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக எல்லாம் செய்வார், உன்மீது அன்பு செலுத்துவார், அந்த அன்பை நீ உணர்வாய் என்றார் கடவுள். மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய். நான் மிகச் சிறியவன், என்னால் நடக்க முடியாது, என்னால் பேச முடியாது, அவர்கள் மொழியைக்கூட புரிந்து கொள்ள முடியாது என குழந்தை கேட்க, அது மிகவும் எளிது. அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்,. உனக்குப் பேச, நடக்க போன்ற அனைத்தையும் கற்றுக் கொடுப்பார், நீ பயப்படத் தேவையில்லை என்றார் கடவுள். சரி, உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று பேசிக் கொள்கிறார்களே, அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்? என குழந்தை கேட்க, நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை, தன்னுயிர் போனாலும் உன்னைப் பாதுகாப்பார் என்றார் கடவுள். இனி நான் உன்னைப் பார்க்கவோ, பேசவோ முடியாதா? என குழந்தை கேட்க, குழந்தையை அன்பாக அணைத்து, அந்த தேவதையிடம் நீ போனதுமே, என் பெயரை உனக்கு அவர் சொல்லித்தருவார். எப்போதும் என்னைப் பற்றி உன்னிடம் பேசுவார், என்னிடம் திரும்பிவரும் வழியையும் உனக்கு சொல்லித் தருவார், நான் உன்னோடுதான் இருப்பேன். ஆனால் நீ என்னைப் பார்க்க முடியாது என்றார் கடவுள். குழந்தைக்கு, உலகின் சத்தங்கள் அதிகமாகக் கேட்கத் தொடங்கின. அப்போது குழந்தை, இறைவா, இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னைவிட்டு பிரியப் போகிறேன், நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல் என குழந்தை கேட்க, குழந்தாய், துணிவுடன் சென்று வா... அந்த தேவதையின் பெயர் உனக்கு முக்கியமில்லை. ஆனால் அவரை, நீ ‘அம்மா’ என்று அழைப்பாய். கடைசியாக உனக்கு ஓர் அறிவுரை. நீ வளர்ந்தபின், தேவதையான அந்த அம்மாவின் மனம் புண்படும்படி ஒருபோதும் எதுவும் பேசி விடாதே என்றார் கடவுள். குழந்தை சரி என்று, வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.