2017-12-08 12:57:00

மியான்மார்,பங்களாதேஷ் திருஅவைகள் உயிர்த்துடிப்புடன்...


டிச.08,2017. மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில், ஒரு சிறுபான்மைத் திருஅவையை, அதேநேரம், விசுவாசத்திலும், சமூகநலப் பணிகளிலும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் ஒரு திருஅவையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் பற்றி, லொசர்வாத்தோரே ரொமானோ வத்திக்கான் தினத்தாளுக்குப் பேட்டியளித்த, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர், கர்தினால் பெர்னான்டோ பிலோனி அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.

இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தையுடன் சென்ற கர்தினால் பிலோனி அவர்கள், இந்நாடுகளிலுள்ள திருஅவைகள், அரசியலிலோ, மத மாற்றப்பணிகளிலோ ஈடுபடாமல், உரையாடலுக்கும், அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கும் தங்களை அர்ப்பணித்துள்ளன என்றும் கூறினார்.

புத்த மதத்தவரை அதிகமாகக் கொண்டிருக்கும் மியான்மாரிலும், முஸ்லிம்களை  அதிகமாகக் கொண்டிருக்கும் பங்களாதேஷிலும் ஆற்றப்படும் நற்செய்தி அறிவிப்புப் பணிகள் பற்றியும் கூறிய கர்தினால் பிலோனி அவர்கள், பல்வேறு இனக்குழுக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளில் மறைப்பணியாளர்கள் ஆற்றும் சேவைகள் பற்றியும் விளக்கினார்.

கடந்த நவம்பர் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை மியான்மாரிலும், நவம்பர் 30ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, பங்களாதேஷிலும் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.