2017-12-08 11:52:00

பாசமுள்ள பார்வையில்...: நெஞ்சைத் தொட்டு நினைவில் நின்றவை


ஒரு 50 வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று மீண்டும் பார்த்தார் வெரோனிக்கா. அவர் வாழ்க்கையில் அடிக்கடி நினைத்து அசைபோட்டு, சுவைக்கும் நினைவு அது. அப்போது அவருக்கு 7 வயதிருக்கும். பள்ளிக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அவர் தாயோ, வெரோனிக்காவின் அறைக்குள் வந்து, 'நான் அலுவலகத்திற்குச் செல்கிறேன், இன்று ஒரு முக்கியமான கூட்டம் இருக்கிறது' என அவசரம் அவசரமாகக் கூறிக்கொண்டே மாடியிலிருந்து கீழிறங்கி காருக்கு ஓடத் துவங்கினார். வழக்கம்போல் அம்மாவுக்கு டாட்டா காட்ட விரும்பிய வெரோனிக்கா, கீழிறங்கி வருவதற்குள் வாகனம் சென்றுவிட்டது. முகம் சுருங்கிய வெரோனிக்கா, தன் பாட்டியிடம் சென்று நடந்ததைக் கூற, பாட்டியும் கைப்பேசியில் தாயை தொடர்பு கொண்டு, பேத்தியின் ஏமாற்றத்தை எடுத்துரைத்தார். மகளிடம் தொலைபேசி வழியாக பேசிய தாய், தான் காத்திருக்காமல் அவசரம் அவசரமாகச் சென்றதற்கு மன்னிப்பு கேட்டார். சமாதானமாகி பள்ளிக்குப் புறப்பட்ட வெரோனிக்கா, வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, தாயின் வாகனம் திரும்பி வந்ததைப் பார்த்தார். தாய் ஓடோடி வந்து, அவளை வாரி அணைத்து முத்தமிட்டுவிட்டு, மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பினார். அந்த நிகழ்வை எண்ணிப் பார்த்த 57 வயது வெரோனிக்கா, ‘அன்று தன் தாய் தனக்கு டாட்டா சொல்ல 10 மைல்கள் திரும்பி வந்தது, இன்றும் நினைவில் இருக்க, அந்நாளில் அவர் அலுவலகத்திற்கு காலதாமதமாகச் சென்றதை, யாராவது நினைவில் வைத்திருப்பார்களா’ என நினைத்துக் கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.