2017-12-08 12:39:00

அமல அன்னை விழா மூவேளை செப உரை


டிச.08,2017. இறைவனோடு எப்போதும் வாழ்ந்து, ஒவ்வொரு சூழலிலும் அவரோடு உரையாடியதன் வழியாக, அன்னை மரியா தன் வாழ்வை அழகுற அமைத்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

அமல அன்னை பெருவிழாவாகிய டிசம்பர் 08, இவ்வெள்ளி நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, மரியா அருளால் நிறைந்தவர் என்பதன் பொருளை விளக்கினார்.

அமல அன்னையின் அழகை இன்று தியானிக்கும்வேளை, இந்நாளையப் பெருவிழாவைப் புரிந்துகொள்வதற்கு, இயேசுவின் பிறப்பு அறிவிப்பு நற்செய்தி நமக்கு உதவுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, மரியாவை, அருள் நிறைந்தவர், அருளால் படைக்கப்பட்டவர், அருளால் முழுவதும் நிறைந்தவர் என்று நாம் செபிக்கின்றோம், இதன் அர்த்தம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அருளால் நிறைந்தவர் என்று, மரியாவா திருஅவை இன்று வாழ்த்துகின்றது என்றும்,  மரியா, அருளால் நிறைந்த, அழகான வாழ்வை வாழ்ந்தார் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, பாவத்திற்கு மறுப்பு சொல்லி, கடவுளின் திட்டத்திற்கு ஆகட்டும் என்று சொல்லும், அழகான வாழ்வை நாம் வாழ்வதற்கு, கடவுளிடம் செபிப்போம் என்று தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த உரைக்குப் பின்னர், இவ்வெள்ளி மாலையில், உரோம் இஸ்பானிய வளாகத்திலுள்ள, அமல அன்னை நினைவிடத்திற்குச் சென்று, இறைவனின் அன்னைக்கு மரியாதை செலுத்தி செபிக்கவிருப்பதாகவும், தன்னோடு ஆன்மீக அளவில் ஒன்றித்திருக்குமாறும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdoğan அவர்களிடம் தொலைப்பேசியில் பேசினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள், அறிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.