2017-12-07 15:43:00

'எங்கள் தந்தாய்' தொலைக்காட்சி நிகழ்வில் திருத்தந்தை


டிச.07,2017. 'பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' என்ற செபத்தின் இறுதியில், 'எங்களை சோதனைக்கு இட்டுச் செல்லாதேயும்' என்று கூறுவது நல்ல மொழிபெயர்ப்பு அல்ல, மாறாக, 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று சொல்வதே பொருத்தமான மொழி பெயர்ப்பு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கூறினார்.

இத்தாலியின் டிவி2000 என்ற தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வழங்கும் 'எங்கள் தந்தாய்' என்ற நிகழ்வில், கடந்த சில வாரங்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நேர்காணல், ஒவ்வொரு புதன் கிழமையும் மாலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரின் ஒரு பகுதியாக, டிசம்பர் 6 இப்புதனன்று பேசிய திருத்தந்தை, 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்ற சொற்றொடர் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இத்தாலியின், பதுவை நகரில், சிறைக்கைதிகள் நடுவே பணியாற்றிவரும் ஆன்மீக வழிகாட்டி மார்கோ போஸ்ஸா அவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்டுவரும் இந்த நேர்காணலின் ஏழாவது பகுதியில், நம்மை சோதனைக்கு இட்டுச்செல்வது சாத்தானுக்கு குறிக்கப்பட்டுள்ள பணியே என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.