2017-12-06 15:20:00

திருஅவை தந்தையரின் ஞானம், வருங்காலத்தினருக்கு...


டிச.06,2017. இலத்தீன் மொழியிலும், கலாச்சாரத்திலும் பொதிந்துள்ள திருஅவை தந்தையரின் ஞானத்தை வருங்காலத் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வது, வத்திக்கான் அறிஞர்களின் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உரோம் நகரில், பாப்பிறை கழகங்களின் 22வது அமர்வு நடைபெறுவதையொட்டி, திருத்தந்தை, இக்கழகத்தின் தலைவர், கர்தினால் ஜியான்பிரங்கோ இரவாசி அவர்களுக்கு வழங்கியுள்ள செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செவ்வாய் மாலை, வாசித்தளித்தார்.

உடல், மனம், ஆன்மா, அறிவுத்திறன் என்று, மனிதர்களை பல கூறுகளாகப் பிரித்துவைக்கும் இன்றைய உலகப் போக்கிற்கு மாற்றாக, அனைத்தையும் ஒருங்கிணைத்து உண்மையைத் தேடச் சொல்லும் கிறிஸ்தவ பாரம்பரியத்தை இளையோருக்கு உணர்த்துவது பாப்பிறைக் கழகங்களின் ஒரு முக்கியப் பணி என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

காணாமற்போன மகன் உவமையில், அவன், தன்னிலை உணர்ந்த வேளையில், தன் தந்தையின் இல்லம் தேடிச் சென்றான் (லூக்கா 15: 17-18) என்று கூறப்பட்டுள்ளது, நமது வாழ்வுக்கும் பொருந்தும் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தன்னிலை உணர்வதே அனைத்து ஞானத்தின் அடித்தளம் என்று எடுத்துரைத்தார்.

"இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்த" (லூக்கா 2:19) கன்னி மரியா, பாப்பிறைக் கழகங்களின் அனைத்துக் கூட்டங்களையும் வழிநடத்த, தன் ஆசீரை அளிப்பதாகக் கூறி, திருத்தந்தை, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.