2017-12-05 14:18:00

மனித உரிமை காப்பாளர்களுக்கு வாழும் உரிமையில்லை


டிச.05,2017. மனித உரிமைகளைக் காப்பதற்கு போராடுபவர்கள் கொல்லப்படுவதும், காணாமல்போவதும் குறித்து கண்டனத்தைத் தெரிவித்து, புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அம்னெஸ்டி இன்டர்னேஷனல் மனித உரிமைகள் அமைப்பு.

மனித உரிமை காப்பாளர்களின் மரணத்தையும், காணாமல்போதலையும் அரசுகள் தடுக்கத் தவறுவதால், அவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டும் இந்த அமைப்பு, மனித உரிமைகளுக்காக, சூற்றுச்சூழலுக்காக, பெண்கள் உரிமைக்காகப் போராடுவோர், மற்றும், பத்திரிகையாளர், வழக்கறிஞர்கள் ஆகியோரின் சாட்சியங்களையும், தன் புதிய அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவதாலும், மனித உரிமை காப்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படாமையாலும், மரணங்கள் தடையின்றி தொடர்கின்றன எனவும் குற்றஞ்சாட்டுகிறது, இம்மனித உரிமைகள் அமைப்பு.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், ஆயிரக்கணக்கான மனித உரிமை காப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அல்லது, காணாமல் போயுள்ளனர் எனக் கூறும் அம்னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பு, 2016ம் ஆண்டில் மட்டும், இவ்வுலகில் 281 மனித உரிமை காப்பாளர்கள் கொலைச்செய்யப்பட்டுள்ளதாகவும், இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்காகும் எனவும் தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.