2017-12-01 13:30:00

திறந்தமனம் கொண்டிருப்பது, கதவாக, ஏணியாக, பாதையாக...


டிச.01,2017. மாண்புமிகு விருந்தினர்களே, அன்பு நண்பர்களே, பல்வேறு மதத்தினரின் பிரதிநிதிகளைச் சந்திப்பது, என் பயணத்தின் மிக முக்கியமான தருணம். நம்மிடையே நிலவும் நட்பை ஆழப்படுத்தவும், அமைதியை வளர்க்கவும் இந்தச் சந்திப்பு உதவும். பல்வேறு மதத்தினரும், உண்மையான மதிப்புடன் ஒன்றுபட்டு வாழமுடியும் என்பதைக் காட்டும் ஓர் அடையாளமாக இந்தக் கூட்டம் அமைகிறது.

மதத்தின் பெயரால் பிரிவுகளையும், வன்முறையையும் உருவாக்குவோருக்கு, மதச் சுதந்திரத்தை அரசியல் சட்டத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாடு, பாடம் புகட்டுகிறது.

மத நம்பிக்கை கொண்டோரும், நல்மனம் கொண்டோரும் இணைந்து, மனித குடும்பத்திற்கு உதவும் போக்கு, இவ்வுலகில் வளர்ந்து வருகிறது. மற்ற மதங்களை, சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் நிலையைக் கடந்து, நம்பிக்கையோடும், புரிதலோடும் அடுத்தவரை வரவேற்கும் நிலைக்குச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம். 'திறந்த மனம்' கொண்டோராய் வாழ சவால் விடப்படுகிறோம்.

சந்திக்கும் கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்கும் 'திறந்த மனம் கொண்டிருத்தல்' என்ற பண்பின் முக்கிய அம்சங்களை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இதன் முதல் அம்சம், கதவு. திறந்த மனம் கொண்டிருப்பது, வெறும் கொள்கைத் திரட்டு அல்ல, மாறாக, அது ஒரு வாழ்வு அனுபவம்.

திறந்தமனம் கொண்டிருப்பது, பரம்பொருளை நோக்கி நம்மை உயர்த்திவிடும் ஏணி. ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறிச்செல்லும்போது, நமது கண்ணோட்டம், மேலும், மேலும் விரிவடைவதோடு, ஒட்டுமொத்த உண்மையைக் காணும் தெளிவையும் தருகிறது.

திறந்தமனம் கொண்டிருப்பது, நன்மைத்தனத்தையும், நீதியையும் தொடந்துசெல்லும் பாதை. அயலவரின் நலனைத் தேடுவதற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை. "தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" (உரோமையர் 12:21) என்று, புனித பவுல் உரோமையரிடம் கூறுகிறார். அடுத்தவர் நலனில் அக்கறை கொண்ட திறந்த மனதிலிருந்து வெளியேறும் பரிவு, வெறுப்பு, ஊழல், வறுமை, வன்முறை என்ற பாலை நிலங்களில், வாழ்வுதரும் ஆறாகப் பாய்கிறது.

பங்களாதேஷ் நாடு இந்தப் பாதையில் பயணித்து வருகிறது. குறிப்பாக, நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தை பேணுதல், இயற்கைப் பேரிடர்களில் உதவுதல் ஆகிய தருணங்களில், அனைத்து மதத்தினரும் இணைந்து வந்துள்ளீர்கள்!

இரானா பிளாசா (Rana Plaza) கட்டடம் இடிந்து விழுந்தபோது, அனைவரும் இணைந்து வந்து உதவிகள் செய்தது, இன்னும் அனைவர் மனதிலும் பதிந்துள்ளது. அடுத்தவருக்கு உதவுதல் என்ற நலமான பாதையை, அனைத்து மதத்தினரும் தெரிவு செய்தது, அவ்வேளையில் தெளிவாகத் தெரிந்தது.

இன்றைய உலகில், நன்மைத்தனத்தை உயிர்துடிப்பாக கொண்டுள்ள உள்ளங்கள் மிக அவசியம். அரசியல் ஊழல், அழிவைப் பறைசாற்றும் மதக் கோட்பாடுகள், தேவையில் இருப்போரை, கண்டும், காணாமல் செல்லும் அக்கறையற்ற மனப்போக்கு இவற்றை எதிர்ப்பதற்கு, நல்ல உள்ளங்கள் தேவை.

சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்க நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக நன்றி கூறுகிறேன். மனிதாபிமானம் நிறைந்த, அமைதி நிறைந்த உலகை கட்டியெழுப்ப வேண்டுகிறேன்.

திறந்த மனதோடு, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். நமது செபங்களில் ஒருவர், ஒருவரை நினைவுகூர்வோமாக!   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.