2017-12-01 15:21:00

டாக்காவில் திருத்தந்தையின் 2வது நாள் நிகழ்வுகள்


டிச.01,2017. அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற விருதுவாக்குடன், பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவுக்கு, நவம்பர் 30, இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பங்களாதேஷ் அரசுத்தலைவர் அப்துல் ஹமித் அவர்கள், விமான நிலையம் சென்று இனிய வரவேற்பளித்தார். மியான்மார் நாட்டின், இரக்கைன் மாநிலத்திலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள மக்களை, மனிதாபிமான உணர்வோடும், தாராள உள்ளத்தோடும் பங்களாதேஷ் நாட்டினர் வரவேற்றுள்ளார்கள் என்று தனது முதல் உரையிலே பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். “வாழ்வில், ஓர் அர்த்தத்தைத் தேடும்வேளையில், தனிமையை உணர்கின்ற மற்றும், குழப்பநிலையில் உள்ள மக்களை வரவேற்பதற்கு, எவ்வளவு திறந்தமனம் தேவைப்படுகின்றது!” என்ற சொற்களை, டிசம்பர் 01, இவ்வெள்ளியன்று டுவிட்டரில் வெளியிட்டு, அன்று காலை 9.15 மணிக்கு, டாக்கா நகரில், தனது இரண்டாவது நாள் பயண நிகழ்வுகளை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். டாக்கா நகரின் திருப்பீடத் தூதரகத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Suhrawardy Udyan பூங்காவில், குருத்துவ திருப்பொழிவு திருப்பலி நிறைவேற்றச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 3.15 மணிக்கு, திருப்பீட தூதரகத்தில், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருமதி ஷேக் ஹசினா அவர்கள், பங்களாதேஷின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மகள் ஆவார். கைம்பெண்ணான இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஹசினா அவர்களைச் சந்தித்த பின்னர், அங்கிருந்து, பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள டாக்கா பேராயர் இல்லத்திற்குச் சென்று, அந்த வளாகத்திலுள்ள பேராலயம் சென்று சிறிதுநேரம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர் பேராயர் இல்லம் சென்று பங்களாதேஷ் நாட்டின் பத்து ஆயர்களுக்கு இத்தாலிய மொழியில் உரையாற்றினார் திருத்தந்தை. இச்சந்திப்பின் இறுதியில், ஏழு நோயுற்ற அருள்பணியாளர்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷா வண்டியில் திருத்தந்தை அமர, டாக்கா பேராயர் இல்லத்தின் தோட்டம் வரை, ஆயர்கள் அவ்வண்டியைத் தள்ளிக்கொண்டே 80 மீட்டர் தூரம் சென்றனர். அத்தோட்டத்தில் பல்சமய மற்றும், அமைதிக்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதற்குப்பின்னர், மூன்று குடும்பங்களைச் சார்ந்த 18 ரொங்கிங்கியா முஸ்லிம் மக்கள் குழு ஒன்றையும் சந்தித்துப் பேசி, ஆறுதலளித்து ஆசீர்வதித்தார், திருத்தந்தை. அதன்பின்னர் டாக்கா பேராயர் இல்லத்திலிருந்து, திருப்பீட தூதரகம் சென்று, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. இத்துடன் இவ்வெள்ளி தின நிகழ்வுகள் நிறைவடைந்தன. இச்சனிக்கிழமையன்று பங்களாதேஷில் பயணத் திட்டத்தை நிறைவேற்றி, உரோம் நகருக்குப் புறப்படுவார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின், மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கான, 21வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வரும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.