2017-12-01 15:31:00

டாக்கா Suhrawardy Udyan பூங்காவில் திருத்தந்தை திருப்பலி


டிச.01,2017. டாக்காவிலுள்ள Suhrawardy Udyan பூங்கா, ஒரு காலத்தில் குதிரைப்பந்தயத் திடலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பூங்காவில்தான், பங்களாதேஷ் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்கள், 1971ம் ஆண்டின் விடுதலைப்போருக்குமுன், வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். இங்குதான் அவரை பாகிஸ்தானிய இராணுவம் கைது செய்தது. இந்தப் பூங்காவில், நாட்டின் விடுதலை நினைவிடமும், அருங்காட்சியகமும் உள்ளன. இந்த நினைவிடம், பங்களாதேஷ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பாகிஸ்தானிய அரசியல்வாதி Huseyn Shaheed Suhrawardy அவர்கள் பெயரால் அழைக்கப்படுகின்றது. Suhrawardy Udyan பூங்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பலியைக் காண்பதற்கு 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட கத்தோலிக்கர், ஆரவாரத்துடனும், ஆவலுடனும் காத்திருந்தனர். திருத்தந்தை, இந்தப் பூங்காவின் நுழைவாயிலில் மலர்மாலை வரவேற்பைப் பெற்று, திறந்த வாகனத்தில் நுழைந்தவுடனேயே, வங்காள மொழியில், திருத்தந்தையை நாங்கள் அன்புகூர்கின்றோம், திருத்தந்தை வாழ்க என்று ஒருவர் உரத்த குரலில் சொல்ல, மக்கள் எல்லாரும் உற்சாகத்தோடு அவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தனர். திருத்தந்தை விசுவாசிகளை ஆசீர்வதித்துக்கொண்டே, அழகான திருப்பலி மேடைக்குச் சென்று திருப்பலியைத் தொடங்கினார். இலத்தீன், ஆங்கிலம், வங்காளம் ஆகிய மொழிகளில், ‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நானே உங்களைத் தேர்ந்துகொண்டேன்’ என்ற இயேசுவின் திருச்சொற்களை மையப்படுத்தி இத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

விசுவாசிகளின் கைதட்டல்கள், பாடல்கள், நடனங்கள், அவர்கள் ஆர்வமுடன் வாய்ப்பாடாகச் சொல்லிக்கொண்டிருந்தவை போன்றவற்றைக் கண்ட திருத்தந்தை,  இறைவனின் மாபெரும் கொண்டாட்டமாகிய இத்திருப்பலியில் கலந்துகொள்வதற்கு, வெகு தொலைவிலிருந்தும், இரு நாள்களுக்கு மேலாக பயணம் செய்தும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், வந்திருக்கும் உங்களின் மனத்தாராளத்தைப் பாராட்டுகிறேன். உங்களின் மனத்தாராளத்திற்கும், பிரமாணிக்கத்திற்கும் மிக்க நன்றி. பேறுபெற்றவர்கள் உணர்வோடு இந்த ஆர்வத்தைத் தொடர்ந்து கொண்டிருங்கள் என்று கூறினார். பின்னர், அருள்பணியாளர்களுக்காகச் செபியுங்கள். அருள்பணியாளர்களுக்கு செபத்தால் உதவுங்கள். அருள்பணியாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது விசுவாசிகளின் கடமை. எவ்வாறு ஆதரவளிப்பது என்று நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் மனத்தாராளத்தில் நம்பிக்கை வையுங்கள். உங்களின் அருள்பணியாளர்களுக்காகச் செபிப்பதில் ஒருபோதும் சோர்ந்துபோகாதீர்கள். நன்றி, நன்றி என்று, திரும்பத் திரும்ப, திருத்தந்தை கூறினார். மேலும், தான் திருப்பொழிவு செய்யவிருந்த புதிய அருள்பணியாளர்கள், வாழ வேண்டியமுறை பற்றியும், குருத்துவத்தின் மேன்மை பற்றியும், அருள்பணியாளர்கள் மீது விசுவாசிகளுக்குள்ள கடமை பற்றியும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருச்சிலுவை துறவு சபை உட்பட, மறைமாவட்டங்களுக்கென, 16 திருத்தொண்டர்களை, அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பங்களாதேஷில், திருச்சிலுவை துறவு சபையைச் சாந்தவர்கள் அதிகளவில் மறைப்பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருப்பலியின் இறுதியில், டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ அவர்கள் திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். Suhrawardy Udyan பூங்காவில், குருத்துவ திருப்பொழிவு திருப்பலியை நிறைவேற்றி, அங்கிருந்து டாக்கா திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 15 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற பங்களாதேஷில் 89.1 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுன்னிப் பிரிவைச் சார்ந்தவர்கள். 0.24 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில், கத்தோலிக்கர் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர். இச்சிறிய கத்தோலிக்க சமூகத்தில், ஒவ்வோர் ஆண்டும், பத்து முதல் பதினைந்து திருத்தொண்டர்கள் வரை, அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.